ஜெனீவா, மார்ச் 27 – ஐநா மனித உரிமை ஆணைய கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது.
இந்த தீர்மானத்திற்கு 23 நாடுகள் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளன. அதே வேளை 12 நாடுகள் அதனை எதிர்த்து வாக்களித்துள்ளன.
இந்தியா உட்பட 12 நாடுகள் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா தனது தரப்பில் இலங்கைக்கு எதிரான இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பை தெரிவித்து வாக்களிப்பை புறக்கணித்துள்ளது.
இலங்கையில் இறுதிக்கட்டப் போரில் நடந்த அப்பாவித் தமிழர்களின் படுகொலைகளுக்கு நீதி வேண்டும் என்றும், இலங்கையை சர்வதேசக் கூண்டில் ஏற்ற வேண்டும் என்றும் தமிழகத்தில் பலரும் குரல் கொடுத்தும் மத்திய அரசு அதற்கெல்லாம் செவி சாய்க்காமல் இலங்கைக்கு ஆதரவாக தனது முடிவை வெளிப்படுத்தியுள்ளது.
அண்டை நாட்டுடன் உறவை கெடுத்துக் கொள்ள முடியாது என்றும், இலங்கையில் நடந்த முன்னேற்றங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்றும் இந்தியா தனது முடிவுக்கு காரணம் கூறியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் வரும் நிலையில், மத்திய அரசின் இந்த முடிவு நிச்சயம் தேர்தலில் பிரதிபலிக்கும் என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, இலங்கை அரசு அமெரிக்க தீர்மானத்தை எதிர்த்து தனது பதில் உரையை தாக்கல் செய்தது.
இது சர்வதேச விதி முறைக்கு எதிரானது என்றும், தீர்மானத்திற்கு எதிராக ஏனைய உறுப்பு நாடுகளும் வாக்களிக்க வேண்டும் என்றும், இலங்கையின் இறையாண்மை காக்கப்பட வேண்டும் என்றும் அந்நாட்டு பிரதிநிதி கோரினார்.