Home Featured தமிழ் நாடு தமிழறிஞர் பேராசிரியர் அ.அறிவு நம்பி மறைந்தார்!

தமிழறிஞர் பேராசிரியர் அ.அறிவு நம்பி மறைந்தார்!

1245
0
SHARE
Ad

arivunambi-prof-passed awayசென்னை – புதுவைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியர் அ. அறிவுநம்பி, உடல்நலம் குன்றிய நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (09.04.2017) இயற்கை எய்தினார். அவருக்கு வயது 65.

முனைவர் அ.அறிவுநம்பி அவர்களின் குடும்பம் மிகச்சிறந்த தமிழ்க் குடும்பம்.தமிழ் அவர்களின் பரம்பரைச் சொத்து என அழுத்தமாகக் குறிப்பிடலாம்.அறிவுநம்பி அவர்களின் முன்னோர் இராமநாதபுரம் அரண்மனையில் அரசவைப் புலவராக இருந்த பெருஞ்சிறப்பிற்கு உரியவர்கள்.சேதுபதி மன்னரின் மேல் பல சிற்றிலக்கியங்களை எழுதிய பெருமை மிக்க புலவர்களுள் இவரின் முன்னோர் குறிப்பிடத்தக்கவர்.

பேராசிரியர் பூ.அமிர்தலிங்கனார் அவர்களுக்கும், இராசலட்சுமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்த முனைவர் அ.அறிவுநம்பி பிறந்த ஊர் சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடியாகும்.

#TamilSchoolmychoice

அழகப்பர் கல்லூரியில், இளம் அறிவியல்(கணக்கு) பட்ட வகுப்பை நிறைவு செய்த பின்னர் முதுகலைத் தமிழ் இலக்கியம் பயின்றவர் அறிவுநம்பி.

பின்னர் முனைவர் பட்டத்திற்குத் தமிழகத்தில் நடைபெறும் தெருக்கூத்துகள் பற்றிய தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் செய்து பட்டம் பெற்றவர்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளர் பணியைத் தொடங்கி, புதுவைப் பல்கலைக் கழகத்தில் இணைப்பேராசிரியர் பணியேற்று, பேராசிரியராக மிளிர்ந்து, பல்கலைக் கழகங்களில் துறைத்தலைவராக, இயக்குநராக, முதன்மையராக (Dean) பணியாற்றும் பெருமை பெற்றவர்.

இதுவரை இவர் நெறிப்படுத்த 18 பேர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். இளம் முனைவர் பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை 20 ஆகும். முதுகலையில் பாடம் பயிற்றுவித்த பட்டறிவு இவருக்கு 26 ஆண்டுகளாக உண்டு. தமிழக, புதுவை அரசுகளின் பல்வேறு அமைப்புகளிலும், பல்கலைக் கழகங்களிலும் உறுப்பினராக இருந்து பல பணிகளைச்செய்து வந்தவர்.

உலக அளவில் நடைபெற்ற கருத்தரங்குகளில் கட்டுரை படித்த பெருமைக்கு உரியவர் அறிவுநம்பி. தேசிய அளவில் நடைபெற்ற கருத்தரங்குகளில் ஆய்வுக் கட்டுரைகள் வழங்கியுள்ளார்.உலக நாடுகள் பலவற்றிற்குக் கல்விப் பயணம் மேற்கொண்டவர். இலங்கை, சிங்கப்பூர்,மலேசியா, உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று வந்தவர்.

நாட்டுப்புறவியல்,சங்க இலக்கியம்,அரங்கக் கலை,சொற்பொழிவுக் கலை பற்றிய பல பயிலரங்குகளில் பயிற்றுநராக விளங்கியவர். பல்வேறு கல்வி நிறுவனங்களில் அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் நிகழ்த்திய பெருமைக்கு உரியவர். தமிழ்ப் பணிகள் காரணமாக பல விருதுகளையும் பெற்றவர்.

பல நூல்களையும் அவர் எழுதி வெளியிட்டிருக்கிறார்.

அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு செல்லியல் குழுமத்தின் சார்பில் எங்களின் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தகவல் – புகைப்படம் : நன்றி – முனைவர் மு.இளங்கோவன் அகப்பக்கம்