வாஷிங்டன் – தனது மூத்த சகோதரி இவாங்கா டிரம்பின் ஆலோசனையின் பேரில் தான், தனது தந்தையான அதிபர் டொனால்ட் டிரம்ப், சிரியா மீது ஏவுகணை வீச அமெரிக்கப் படைகளுக்கு உத்தரவிட்டதாக எரிக் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.
அண்மையில் சிரியாவில் நடத்தப்பட்ட இரசாயனத் தாக்குதலில் கிட்டதட்ட 100 பேர் வரை மரணமடைந்தனர்.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 7-ம் தேதி, சிரியா மீது அமெரிக்கா 59 ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் 6 பேர் மரணமடைந்தனர். அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு சிரியா, ரஷ்யா ஆகிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்பின் மகனான எரிக் டிரம்ப், அதிபரின் ஆலோசகராகச் செயல்பட்டு வரும் தனது மூத்த சகோதரி இவாங்கா டிரம்ப், சிரியா மீது தாக்குதல் நடத்த தனது தந்தையைத் தூண்டியிருக்கலாம் என்று தெரிவித்திருக்கிறார்.