சிட்னி – ஆஸ்திரேலியாவின் குவாண்டாஸ் விமான நிறுவனத்தின் துபாய் செல்லும் விமானத்தில், கத்தார் நாட்டவர்கள் ஏறத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
காரணம், தீவிரவாதத்திற்குத் துணை போவதால், கத்தார் நாட்டுடனான உறவை முறித்துக் கொள்வதாக, சவுதி அரேபியா, யுஏஇ, எகிப்து என மத்தியக் கிழக்கு நாடுகள் பல கடந்த திங்கட்கிழமை அறிவித்தன.
இந்நிலையில், கத்தார் நாட்டவர்கள் தங்களது நாட்டு விமான நிலையங்களைப் பயன்படுத்தவோ, வேறு நாடுகளுக்குச் செல்ல யுஏஇ விமான நிலையங்களில் மாற்று விமானங்கள் எடுக்கவோ தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
எனவே துபாய் செல்லும் குவாண்டாஸ் விமானங்களில் கத்தார் நாட்டவர்களை ஏற்றத் தடை விதித்திருக்கிறது அந்நிறுவனம்.
இது குறித்துப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், அவ்வாறு செல்லும் பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் கண்டாஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது.
அபுதாபிக்குச் சொந்தமான எத்திஹாட் ஏர்வேஸ் நிறுவனம் நேற்று செவ்வாய்க்கிழமை முதல், கத்தார் செல்லும் தங்களது விமானங்களை நிறுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.