தெக்ரான் – ஈரான் தலைநகர் தெக்ரானில் நாடாளுமன்றத்தில் உள்ளே இன்று புதன்கிழமை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 பேர் பலியாகியிருப்பதாகவும், பலர் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
நாடாளுமன்றத்தின் உள்ளே பொதுமக்களை சிறை பிடித்து வைத்திருந்த தீவிரவாதிகளுடன் நடந்த சுமார் 5 மணி நேர சண்டையின் முடிவில், தெக்ரான் நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் (மலேசிய நேரப்படி 6.30) தீவிரவாதிகள் அனைவரும் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்றிருக்கிறது. பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் சண்டை நடந்து கொண்டிருந்த வேளையில், அமாக் பிரபகோண்டா முகமை மூலமாக, நாடாளுமன்றத்தின் உள்ளே தீவிரவாதிகள் இருக்கும் காணொளியை வெளியிட்டு, தாங்கள் தான் இதற்குக் காரணம் என்று ஐஎஸ் அறிவித்திருக்கிறது.
தாக்குதல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பது மிகவும் அரிது என்று கூறப்படுகின்றது.