சென்னை – தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் மலிந்து கிடப்பதாக நடிகர் கமல்ஹாசன் கூறிய கருத்துக்கு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகன் உட்பட ஆளுங்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் கடும் விமர்சனங்களைக் கூறி வருகின்றனர்.
அமைச்சர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில் கமலை ஒருமையில் பேசத் தொடங்கினர்.
‘கமல் பணத்திற்காக எதையும் செய்வார்’, ‘கமல் ஒரு ஆளே கிடையாது’ என வெளிப்படையாகவே கமலைத் தாக்கி அறிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், கமலுக்கு எதிர்கட்சித் தலைவர்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகின்றது.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கமல் குறித்துக் கூறுகையில், “தமிழக அரசு பற்றி நடிகர் கமல்ஹாசன் கூறியிருக்கும் கருத்து, தமிழக மக்களின் கருத்து. அதைத் தடுக்க அமைச்சர்கள் முயற்சி செய்யக் கூடாது. அது ஜனநாயகத்தின் அடிப்படை உரிமையைப் பறிக்கும் செயல்” என்று தெரிவித்திருக்கிறார்.
அடுத்ததாக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கமல் குறித்துப் பேசுகையில், “நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு அடுத்ததாக தமிழ் சினிமாவில் தலைச் சிறந்த நடிகராகக் கருதப்படும் கமல்ஹாசன் விமர்சனத்திற்கு எதிராக அமைச்சர்கள் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துவது தமிழக அரசுக்கு எதிரான விளைவை ஏற்படுத்தும். எனவே அதை அவர்கள் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.