Home உலகம் பாகிஸ்தான் திரும்பினார் முன்னாள் அதிபர் முஷாரப்

பாகிஸ்தான் திரும்பினார் முன்னாள் அதிபர் முஷாரப்

535
0
SHARE
Ad

musarafஇஸ்லாமாபாத், மார்ச்.25- லண்டன் மற்றும் துபாயில் தலைமறைவாக இருந்த பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பெர்வேஸ் முஷாரப் நேற்று நாடு திரும்பினார்.

ராணுவ தளபதியாக இருந்த முஷாரப், 1999ல் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீபின் அரசை ராணுவ புரட்சி மூலம் கவிழ்த்து, ஆட்சியை கைப்பற்றினார்.

பின், 2002ல் பாகிஸ்தான் அதிபரான இவரது ஆட்சிக்காலத்தில் முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோ கொல்லப்பட்டது, நீதிபதிகளை கைது செய்தது தொடர்பாக, முஷாரப் மீது குற்றம்சாட்டப்பட்டது.

#TamilSchoolmychoice

இதையடுத்து, 2008ல் அதிபர் பதவியை ராஜினாமா செய்த முஷாரப் நாட்டை விட்டு வெளியேறி துபாய் மற்றும் பிரிட்டனில் தஞ்சமடைந்தார்.

வரும் மே 11ல் பொது தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் ‘அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின்’ சார்பாக, தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார்.

பல்வேறு வழக்குகளில் கைது செய்யும் ஆணை பிறப்பிக்கப்பட்டும், அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் நாடு திரும்பியதும் கைது செய்யப்படும் சூழல் நிலவியது.

முன்னெச்சரிக்கையாக அவர் ஜாமின் கோரி விண்ணப்பித்தார். பாக்கிஸ்தான் நீதிமன்றம், அவரை 10 நாட்களுக்கு கைது செய்யாத வகையில் முன் ஜாமின் வழங்கியுள்ளது.

“முஷாரப்  நாடு திரும்பியதும் தற்கொலைப்படை தாக்குதலில் கொல்லப்படுவார்’ என, தலிபான் பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

இந்நிலையில் துபாயிலிருந்து விமானம் மூலம் நேற்று கராச்சி விமான நிலையத்துக்கு, முஷாரப் வந்தடைந்தார். அவரை வரவேற்க அவரது கட்சியினர் ஏராளமானோர் விமான நிலையத்துக்கு வந்திருந்தனர்.

எனினும், பாதுகாப்பு காரணங்களுக்காக கட்சி தொண்டர்களை சந்திக்க அவர் அனுமதிக்கப்படவில்லை. “தலிபான்களின் மிரட்டலுக்கு நான் அஞ்சவில்லை; என் மீதான வழக்குகளை சந்திக்கவும் தயார்,” என, கூறியுள்ளார்.