Home நாடு அம்னோவுக்குள் பிளவுகளை ஏற்படுத்துவதில் வெற்றி கண்ட மகாதீர்!

அம்னோவுக்குள் பிளவுகளை ஏற்படுத்துவதில் வெற்றி கண்ட மகாதீர்!

772
0
SHARE
Ad

Mahathir (500x333)கோலாலம்பூர் – துன் மகாதீர் தனது அரசியல் வரலாற்றில் எத்தனையோ அனுபவங்களையும், சாதுரியங்களையும், வியூகங்களையும் பார்த்தவர், கையாண்டவர், பிரயோகித்து வெற்றியும் கண்டவர்.

இப்போது, ஒட்டு மொத்த அம்னோவே அவரிடம் சிக்கிக் கொண்டு விழிக்கிறது என்பது போன்ற தோற்றத்தை தனது அண்மையக் கால நடவடிக்கைகளின் மூலம் ஏற்படுத்தியிருக்கிறார். நடந்து கொண்டிருக்கின்ற சம்பவங்களைப் பாரத்தால் அம்னோவில் பிளவுகளை ஏற்படுத்துவதில் மகாதீர் வெற்றியும் கண்டிருக்கிறார் என்பது நிதர்சனமாகத் தெரிகிறது.

தனது கூர்மையான, நன்கு திட்டமிடப்பட்ட, தெளிவான நோக்கங்களோடு கூடிய கணைகளைத் தொடுத்து, அம்னோவுக்குள்ளேயே சர்ச்சைகளையும், பிளவுகளையும் உண்டாக்கி வருகிறார் மகாதீர்.

#TamilSchoolmychoice

“தற்காப்பை விட தாக்குதலே சிறந்தது”

“அரசியலில் சிறந்த தற்காப்பு வியூகம், எதிரியைத் தாக்குவதுதான்” (The best form of defense is attack) என்ற தாரக மந்திரத்தை தனது வாழ்நாள் அரசியல் பாடமாகக் கொண்டு செயல்பட்டு வந்திருப்பவர் மகாதீர் என்பது அவர் நடந்து வந்த அரசியல் பாதையை ஊன்றிக் கவனிப்பவர்களுக்குப் புரியும்.

mahathir-zahid-comboதன்மீது குற்றச்சாட்டுகளோ, தாக்குதல்களோ முன்வைக்கப்படும்போது, அதனைத் தற்காத்துப் பதில் கூறிக் கொண்டிருக்காமல், எதிரியின் மீது வேறு சில தாக்குதல்களை எதிரி எதிர்பாராத முனைகளில் இருந்து தொடுப்பது அவர் வழக்கம்.

துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி தன்மீது இந்தியர் பாரம்பரியம் குறித்த தாக்குதலை, அடையாள அட்டை பெயரைச் சுட்டிக் காட்டி தொடுத்தபோது, அதற்குப் பதிலளித்து அடையாள அட்டையைக் காட்டுங்கள் என சவால் விட்ட அதே தருணத்தில்,

சாஹிட் வங்கிக் கணக்கில் 230 மில்லியன் இருந்தது என்பதையும், நஜிப்பை பிரதமர் பதவியில் இருந்து வீழ்த்துவதற்காக தன்னை வந்து அவர் சந்தித்தார் என்றும் எதிர்த் தாக்குதலைத் தொடுத்திருக்கின்றார் மகாதீர்.

இவை அனைத்திற்கும் இதுவரை சாஹிட்டிடம் இருந்து முறையான, நேரடியான பதில் வரவில்லை.

மகாதீர்-சாஹிட் சந்திப்பு குறித்து ஜமால் காவல் துறை புகார்

ஆனால், மகாதீர் எதிர்பார்த்தது நடந்துவிட்டது. ஒரு பக்கம் சாஹிட்டின் சொத்து விவரங்கள் குறித்த சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன.

Dato Jamal Yunusஇன்னொரு பக்கம், அம்னோ சுங்கை பெசார் தொகுதித் தலைவர் டத்தோ ஜமால் முகமட் (படம்) சாஹிட் – மகாதீர் இடையிலான சந்திப்பு குறித்தும் நஜிப்பை வீழ்த்துவது குறித்து அவர்கள் நடத்திய பேச்சு வார்த்தை குறித்தும் காவல் துறையில் புகார் ஒன்றை செய்திருக்கிறார்.

நஜிப் தரப்பிலிருந்தும் இதுவரை அதிகாரபூர்வ பதில் எதுவும் வரவில்லை.

மகாதீர் அடையாள அட்டை விவகாரத்தை சாஹிட் கொண்டுவந்தது தவறான வியூகம் என்றும் இதனால் அம்னோவுக்குப் பெரும் பின்னடைவு என்பதோடு, மகாதீர் மீதான மலாய்க்காரர்களின் அனுதாபமும் பெருகும் என்பதும் அரசியல் பார்வையாளர்களின் வாதம்.

najib-mahathir22 ஆண்டுகள் அம்னோவின் தலைவராகவும், பிரதமரமாகவும் இருந்த மகாதீரை அவர் மலாய்க்காரர் அல்ல என அவரது 92-வது வயதில் கண்டுபிடித்து இவ்வாறு கேவலப்படுத்துவது, அம்னோவையே கேலிக் குறியாக்கும் செயல் எனக் கருதப்படுகின்றது.

இதனால், அம்னோவுக்குள் மாற்றுக் கருத்துகளும், புதிய சர்ச்சைகளும் எழுந்துள்ளன. சாஹிட்டுக்கும், நஜிப்புக்கும் இடையில் கூட மகாதீரின் கருத்து விரிசலை ஏற்படுத்தியிருக்கலாம்.

14-வது பொதுத் தேர்தலைச் சந்திக்க அம்னோ வலுவுடன் திகழ வேண்டிய இந்த நேரத்தில் மகாதீர் தனது வியூகத்தால், சில விரிசல்ளை – பிளவுகளை ஏற்படுத்தி விட்டார் என்பதில் ஐயமில்லை.

மகாதீரின் அடையாள அட்டையை வைத்து அவரை மட்டம் தட்ட நினைத்த சாஹிட், தற்போது தனது சொத்து விவகாரத்திலும், நஜிப்புக்கும் தனக்கும் இடையில் நல்லுறவு நீடிக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டிய நெருக்கடிக்கும் ஆளாகி விட்டார்.

இந்நிலை இப்படியே தொடர்ந்தால், அம்னோ மேலும் பிளவுறும் என்ற அச்சமும், மகாதீர் அடுத்தடுத்து என்னென்ன அஸ்திரங்களைப் பிரயோகிப்பார் என்ற முன்னெச்சரிக்கையும் நஜிப்பை சூழ்ந்துள்ளதால்தான் அக்டோபரிலேயே பொதுத் தேர்தலை நடத்தி முடித்து விட எண்ணம் கொண்டுள்ளார் என்றும் கருதப்படுகிறது.

-இரா.முத்தரசன்