எர்ணாகுளம் – கேரள மாநிலத்தில் இருந்து மலேசியாவுக்கு நூதன முறையில் கடத்தப்படவிருந்த சுமார் 55 கிலோ போதை மாத்திரைகளை விமான நிலைய சோதனை அதிகாரிகள் கைப்பற்றியிருக்கின்றனர்.
நெடும்பாஞ்சேரி அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து 600 கட்டைப் பைகளில், கைப்பிடியின் மூங்கில் குச்சியின் உள்ளே 55 கிலோ போதை மாத்திரைகள் அடைத்து மலேசியாவுக்கு கடத்த முயற்சி நடந்திருக்கிறது.
இப்படி ஒரு கடத்தல் முயற்சி நடத்தப்படவிருப்பதை முன்கூட்டியே அதிகாரிகள் அறிந்திருந்ததால், சோதனைகளைக் கடுமையாக வைத்திருந்தனர்.
அப்போது 600 கட்டைப் பைகள் மலேசியாவுக்கு அனுப்பப்படுவதாக சொல்லப்பட்ட ஒரு சரக்குப் பெட்டியைச் சோதனை செய்த போது அதில் 60 பைகளில், எப்டிரின் என்ற போதை மாத்திரைகள் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்திருக்கின்றனர்.
இந்திய மதிப்பில் அதன் விலை 1 கோடி ரூபாய் ஆகும்.
இதன் மூலம் மிகப் பெரிய கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டிருக்கிறது. தற்போது அந்தக் கட்டைப் பை தயாரிக்கும் நிறுவனத்தை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.