சென்னை – “மெர்சல்” படம் இதுவரை வந்த தமிழ்ப் படங்களிலேயே அதிக முதல் நாள் வசூலை ஈட்டிய படம் என்ற பெருமையைப் பெற்றுவிட்டது. ரஜினியின் கபாலி 22 கோடி வசூலித்து இத்தனை நாட்களாக முதல் இடத்தைப் பிடித்திருக்க, தீபாவளியன்று வெளியான மெர்சல் 25 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருக்கிறது.
முதல் நாளிலேயே உலகம் எங்கும் 50 கோடி ரூபாய்க்கும் மேல் மெர்சல் வசூலித்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. முதல் மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள்ளேயே படத்தின் வசூல் 100 கோடியைத் தாண்டி விடும் எனக் கணிக்கின்றனர் படத்தின் வெளியீட்டாளர்கள்.
அதே சமயம் படம் வெளியான கடந்த இரண்டு நாட்களில் அதில் இடம் பெற்ற ஜிஎஸ்டி வசனங்கள் உட்பட பல அம்சங்கள் மீது கண்டனங்கள் எழத் தொடங்க, இன்றைய தேதியில் இந்தியா முழுவதும் சர்ச்சைக்குரிய படமாகிவிட்டது மெர்சல்.
அத்தனை தேசிய நிலைத் தலைவர்களும் இந்தப் படத்தைத் தாக்கியும், தற்காத்தும் களத்தில் குதித்திருக்கிறார்கள்.
“தமிழர் பெருமையில் தலையிடாதீர்கள்” – ராகுல் காந்தி
“சினிமா என்பது தமிழ் கலாச்சாரத்தையும், மொழியையும் ஆழமாகப் பிரதிபலிப்பது. மெர்சலில் தலையிடுவதன் மூலம் தமிழ் பெருமையை பூதம் போன்று பயங்காட்ட வேண்டாம், மிஸ்டர் மோடி” என்ற பொருளில் தனது டுவிட்டர் பக்கத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பதிவிட பற்றிக் கொண்டது சர்ச்சை நெருப்பு!
உடனே நேற்று சனிக்கிழமை முழுவதும் இந்தியாவின் ஆங்கில செய்தித் தொலைக்காட்சிகள் அனைத்தும் ராகுல் காந்தி சொன்னதையும் அவருக்கு எதிராக பாஜக தலைவர்கள் பொழிந்த வசைமாரிகளையும் ஒளிபரப்பி தங்களின் ஊடகத் தாகத்தைத் தீர்த்துக் கொண்டன.
போதாக்குறைக்கு முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரசின் மற்றொரு பிரமுகருமான ப.சிதம்பரம் மெர்சல் சர்ச்சைக் களத்தில் குதித்த மற்றொரு அரசியல் பிரமுகராவார். “தயாரிப்பாளர்கள் இனிமேல் ஆவணப் படங்கள்தான் தயாரிக்க முடியும்” என்று சிதம்பரம் கிண்டலாகத் தனது டுவிட்டர் தளத்தில் கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து நேற்று சனிக்கிழமை இரவு ஒளியேறிய நியூஸ் 18 தொலைக்காட்சி அலைவரிசையின் நேர்காணலில் தோன்றிய பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பாஜகவைத் தாக்கிக் கருத்து சொன்னாலும் பரவாயில்லை, ஆனால், தவறான தகவல்கள் மெர்சல் படத்தின் மூலம் வெளியிடப்பட்டதால்தான் நாங்கள் கண்டனம் தெரிவிக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து தமிழ் நாட்டின் ஒவ்வொரு தலைவரும் தங்களின் கருத்தைச் சொல்ல முற்பட்டிருக்கிறார்கள்.
படம் வெளியான இரண்டு நாட்களிலேயே படத்தின் கதையும், காட்சிகளும் ஏற்கனவே வந்த தமிழ்ப் படங்களில் இருந்து உருவி எடுக்கப்பட்டன எனக் கிண்டலும், கேலியும் எழ – பலர் அட்லியைப் போட்டு வாங்கு வாங்கு என வாங்கத் தொடங்க – படம் பெரும் தோல்விப் படமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு எழத் தொடங்கியது.
ஆனால், தமிழக பாஜக தலைவர்கள், மெர்சல் குறித்து கண்டனம் தெரிவிக்க தற்போது அந்தப் படம் இந்தியா முழுவதும் பேசப்படும் படமாகிவிட்டது.
இதற்கிடையில் படத் தயாரிப்பாளர்கள், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதற்கு ஒப்புக் கொண்டு அறிக்கை விடுத்திருக்கிறார்கள். இந்த ஆண்டுத் தீபாவளியை மெர்சல் தீபாவளியாக்கிய இரசிகர்களுக்கு நன்றியும் தெரிவித்திருக்கிறார்கள் படத்தைத் தயாரித்த ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம்.
இதற்கிடையில் விஜய் கிறிஸ்துவர் என்பதை மறைமுகமாகச் சுட்டிக் காட்டும் வண்ணம் டுவிட்டரில் கருத்து வெளியிட்ட பாஜகவின் தேசியப் பொதுச் செயலாளர் எச்.இராஜாவும் கடும் கண்டனங்களைச் சந்தித்து வருகிறார்.
“மோடி மீதான ஜோசப் விஜய்யின் வெறுப்புதான் மெர்சல்” என எச்.இராஜா வெளியிட்ட கருத்து மத உணர்வுகளைத் தூண்டுவதாக இருக்கிறது என்றும், விஜய்யின் கிறிஸ்துவப் பின்னணியைச் சுட்டிக் காட்டுவதாக இருக்கிறதென்றும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.
இந்த வகையில் தமிழ் நாட்டுக்கு வெளியிலும் அகில இந்திய அளவில் பலத்த சர்ச்சைகளைக் கிளப்பி பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது மெர்சல்!
-செல்லியல் தொகுப்பு