2018-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, பினாங்கு மாநிலத்திலுள்ள விமான நிலையம் தரம் உயர்த்தப்பட்டு, அதன் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என பிரதமரும் நிதியமைச்சருமான நஜிப் துன் ரசாக் அறிவித்தார்.
தனது வரவு செலவுத் திட்டம் அரசியல் நோக்கமற்றது என்றும் அனைத்து தரப்பு மக்களையும் கவனத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது என்றும் கூறிய நஜிப், இதற்கு ஆதாரம் எதிர்க்கட்சிகளின் மாநிலங்களிலும் மேம்பாட்டு திட்டங்களை அரசாங்கம் மேற்கொள்வதுதான் என்றார்.
அந்த அடிப்படையில் கிளந்தான், கோத்தா பாருவில் உள்ள விமான நிலையமும், பினாங்கு மாநில விமான நிலையமும், லங்காவித் தீவு விமான நிலையமும் தரம் உயர்த்தப்படும் என அறிவித்தார்.