Home கலை உலகம் திரைவிமர்சனம்: ‘அறம்’ – ஆழ்துளைக் கிணறுகளின் அவலங்கள்! பிரச்சார நெடி!

திரைவிமர்சனம்: ‘அறம்’ – ஆழ்துளைக் கிணறுகளின் அவலங்கள்! பிரச்சார நெடி!

1962
0
SHARE
Ad

aramm-movie-poster-1கோலாலம்பூர் – பெரும் எதிர்பார்ப்புடன், நயன்தாரா நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘அறம்’ திரைப்படம் படம் பார்ப்பவர்களையும் ஏமாற்றவில்லை. நயன்தாரா இரசிகர்களையும் ஏமாற்றவில்லை.

ஆழ்துளைக் கிணறு ஒன்று மூடப்படாமல் விடப்பட, அதில் தவறி விழுந்து சிக்கிக் கொள்ளும் சுமார் 5 வயதுடைய சிறுமி – அதை மீட்க அந்தக் கிராமமே ஒன்று திரண்டு போராடும் ஒற்றுமை – அரசியல்வாதிகள், அதிகாரிகள், காவல் துறையினரின் இடையூறுகள் – இவையெல்லாவற்றையும் மீறி, குழியில் சிக்கிக் கொண்ட சிறுமியை மீட்க, வழக்கமான அரசு அதிகாரிகளுக்கான நடைமுறைகளை மீறி அறப்போராட்டம் நடத்தும் அந்த மாவட்ட ஆட்சியாளர் (கலெக்டர்) மதிவதனி (நயன்தாரா) – அதற்காக அவர் எதிர்நோக்கும் மேலதிகாரியின் ஒழுங்கு நடவடிக்கை – போன்ற அனைத்து அம்சங்களையும் ஒரே நேர்கோட்டில் கொண்டுவந்து இணைத்துப் பயணிக்கின்றது ’அறம்’.

aramm-actress-nayanthara-இயல்பான சாதாரணமான கிராம மக்கள், அவர்களின் பழக்க வழக்கங்கள், அவர்கள் படும் சிரமங்கள், ஆகியவற்றை யதார்த்தமாகக் காட்டியிருக்கின்றார் படத்தை எழுதி இயக்கி இருக்கும் கோபி நயினார். இவர்தான் ‘கத்தி’ படக் கதையை முதன் முதலில் ஏ.ஆர்.முருகதாசுக்குச் சொன்னார் என்றும், அந்தக் கதையைத்தான் முருகதாஸ் சற்று மாற்றி படமாக எடுத்தார் என்றும் ‘கத்தி’ வெளியான காலகட்டத்தில் சர்ச்சைகள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

அதற்கேற்பவே, இந்தப் படத்திலும், படம் முழுக்க தண்ணீர்ப் பிரச்சனையையும், கிராமத்தில் தாக்கம் ஏற்படுத்தும் பல்வேறு பிரச்சனைகளையும் விரிவாக எடுத்துக் கூறியிருக்கிறார் கோபி நயினார். ஆழ்துளைக் கிணறு குறித்த பல்வேறு விவரங்களை – கடந்த காலத்தில் நடந்த பல்வேறு உண்மைச் சம்பவங்களை ஆராய்ந்து, திரைக்கதையை அமைத்திருப்பது இயக்குநரின் உழைப்பைப் பறைசாற்றுகிறது. அதிலும் இந்தியாவின் விண்கலத் தொழில் நுட்பத்தையும், அதன் மேன்மையையும் பாராட்டும் அதே வேளையில், ஆழ்துளைக் கிணறு என்று வரும்போதும், அதில் குழந்தைகள் சிக்கிக் கொள்ளும்போதும், அதற்கேற்ற தொழில்நுட்ப முன்னேற்றம் கிராமங்களைச் சென்றடையாததைச் சாடியிருப்பதும் நல்ல ஒப்பீட்டு உத்தி.

Aramm-Movie-Nayanthara-stillஆனால், அதுவே சில கட்டங்களில் திகட்டவும் செய்கிறது. படம் முழுக்க அளவுக்கதிகமாக ஒவ்வொரு கதாபாத்திரமும் அரசு இயக்கத்தைக் குறை சொல்வதும், அறிவுரைகளை வாரி வழங்கிப் பேசுவதும் நமக்கு சலிப்பை ஏற்படுத்துகிறது. கதாபாத்திரங்கள் மட்டும் பேசுவது போதாது என்று, சம்பவம் குறித்து நியூஸ் 18 தொலைக்காட்சி அலைவரிசை ‘காலத்தின் குரல்’ விவாத மேடை நடத்துவதாகக் காட்டி, அதிலும் அடுக்கடுக்கான அறிவுரைகளை விவாதிப்பவர்களின் வாயிலாக அடுக்கடுக்காக வழங்குகிறார்கள்.

ஆழ்துளைக் கிணறு மட்டும் என்றில்லாமல், கிராமத்தினர் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சனைகளையும் அலசி ஆராய்ந்திருப்பதால், படம் முழுக்க அறிவுரைகளோடு கூடிய பிரச்சார நெடி வீசுகிறது. இதைத் தவிர்த்திருக்கலாம்.

நடிப்பு

aramm-nayanthara-படத்தில் தனித்து நிற்பதோடு, படத்தையே தூக்கி நிறுத்துவதும் நயன்தாராதான்! தனது உச்சகட்ட நட்சத்திர அந்தஸ்தை அப்படியே தூக்கி மூட்டைக் கட்டி வைத்து விட்டு, படத்தின் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து, இறங்கி வந்து படத்தோடு ஒன்றித்து நடித்திருக்கிறார். மாவட்ட ஆட்சியாளருக்கே உரிய மிடுக்கு, அதிகார தோரணை, யாராக இருந்தாலும், எதிர்த்து நின்று பதில் கொடுக்கும் துணிச்சல் – இப்படியாக மதிவதனி என்ற கதாபாத்திரத்தை அப்படியே செதுக்கியெடுத்து நம் கண் முன் நிறுத்துகிறார்.

படம் முழுக்க, நயன்தாரா அணிந்திருப்பது இரண்டே இரண்டு வண்ணங்களிலான சேலைகள்தான். அதுவும் சாதாரண பருத்திப் (காட்டன்) புடவைகள். மிகவும் எளிமையான ஒப்பனை. அதற்காகவே, நயன்தாராவுக்கு பாராட்டுகள் தெரிவிக்கலாம். எந்தவிதத்திலும் சமரசம் செய்துகொள்ளாமல் கதாபாத்திரத்தின் தேவைக்கேற்ப நடித்திருக்கிறார் நயன்!

aramm-stills-படத்தில் ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிக் கொள்ளும் குழந்தையின் தந்தையாக இராமச்சந்திரன் துரைராஜ் சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். வழக்கமாக, சென்னை குண்டர் கும்பலில் ஒருவராக கரகரப்பான குரலில் பேசி நடிக்கும் அவர், இந்தப் படத்தில் வர்ணம் பூசும் தொழிலாளியாக, சாதாரண கிராமத்தானாக, குழியில் சிக்கிக் கொண்ட குழந்தையின் உணர்ச்சிக் கொந்தளிப்பான தந்தையாக மனதில் நிற்கிறார்.

தாயாக வரும் சுனு இலட்சுமியும் தாயின் தவிப்பை வெளிக் கொணரும் சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்.

காக்கா முட்டை படத்தில் நடித்த இரண்டு சிறுவர்களும் இந்தப் படத்திலும் இணைந்து சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

ramachandran-durairaj-actor-aramm
இராமச்சந்திரன் துரைராஜ்

ஒரே பிரச்சனையை மையமாக வைத்து, சம்பவங்களால் நீட்டித்துக் கொண்டே போவதும், தீர்வை நோக்கி நகராமல் சம்பந்தப்பட்ட மனிதர்களின் உட்பூசல்களை அளவுக்கதிகமாகக் காட்டுவதும், அளவுக்கதிகமானப் பிரச்சார நெடியும், படத்தைக் கொஞ்சம் தொய்வடையச் செய்கின்றன.

இருப்பினும், நயன்தாராவின் தனித்துவமான கம்பீர நடிப்பு – பின்தங்கிய கிராமத்தின் பிரச்சனைகளை அலசி ஆராய்ந்த விதம் – கூர்மையாக சமூகப் பிரச்சனையை அணுகியது – இயல்பான, யதார்த்தமான நடிப்பு – சினிமா வியாபாரத்திற்காக எந்தவித சமரசமும் செய்துகொள்ள திரைக்கதை – இப்படியாக பலவிதங்களிலும் சிறந்து நிற்கும் ‘அறம்’ கண்டிப்பாக ஒருமுறை பார்க்க வேண்டிய படம்.

எல்லாம் சரி! ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுமி என்னவானார்? காப்பாற்றப்பட்டாரா?

படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்!

-இரா.முத்தரசன்