கோலாலம்பூர் – உலகப் புகழ் பெற்ற அனைத்துலகப் பத்திரிக்கையான ‘எகானமிஸ்ட்’ (Economist) நாட்டின் 14-வது பொதுத் தேர்தல் அடுத்தாண்டு, பிப்ரவரி மாதத்தில் சீனப்புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குப் பின்னர் நடைபெறும் எனக் கணித்துள்ளது.
சீனப் புத்தாண்டு பிப்ரவரி மாத மத்தியில் 16-ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கிறது.
பிப்ரவரி மாதமே பிரதமர் நஜிப்புக்கு தேர்தல் நடத்த சிறந்த தருணம் என்றும், அதே சமயம் எதிர்க் கட்சிக் கூட்டணிக்கு கசப்பான முடிவுகள் காத்திருக்கின்றன என்றும் ‘எகானமிஸ்ட்’ மேலும் ஆரூடம் கூறியுள்ளது.
எகானமிஸ்ட் பத்திரிக்கை மலேசியாவின் 14-வது பொதுத் தேர்தல் குறித்து வெளியிட்டுள்ள கட்டுரையில் கண்டுள்ள மேலும் சில முக்கிய அம்சங்கள்:
- 1 எம்டிபி ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தாலும் நஜிப் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவார்.
- வாக்காளர்களை இடம் மாற்றுவது நஜிப் பொதுத் தேர்தலில் வெற்றி பெறப் போவதற்கு உதவப் போகும் முக்கியக் காரணமாகத் திகழும்.
- கடந்த பொதுத் தேர்தலில் மொத்த வாக்காளர்களின் 51 சதவீத வாக்குகளைப் பெற்றாலும், எதிர்க்கட்சிகள் 40 சதவீத நாடாளுமன்ற இடங்களையே வெல்ல முடிந்தது. இந்த முறையும் இது போன்ற போக்கு கூடுதலாக நிகழ வாய்ப்பிருக்கிறது. காரணம். அதிகமான சீன வாக்காளர்களைப் பிரித்தெடுத்து பெரிய நகர்ப்புறத் தொகுதிகளுக்குள் திணிக்கும் முயற்சிகள் அரசாங்க இலாகாக்களின் மூலமாக நடைபெற்று வருகின்றன.
- நஜிப் வாக்காளர்களை ரொக்கப் பணத்தால் ‘குளிப்பாட்டி’ வருகிறார். அண்மைய வரவு செலவுத் திட்டம் இதற்கான உதாரணமாகும்.
- மகாதீர் இணைந்தது, எதிர்க் கட்சிகளுக்கு பலத்தைக் கூட்டியிருக்கிறது. மலாய் வாக்காளர்களைக் கொண்ட புறநகர் தொகுதிகளில், அரசியல் சுனாமி வீசச் செய்து, வாக்குகளைப் பிரிப்பதன் மூலம் வெற்றி வாகை சூட முடியும் என எதிர்க்கட்சிக் கூட்டணி ‘பக்காத்தான் ஹரப்பான்’ கருதுகிறது.