ஆழ்துளைக் கிணறு ஒன்று மூடப்படாமல் விடப்பட, அதில் தவறி விழுந்து சிக்கிக் கொள்ளும் சுமார் 5 வயதுடைய சிறுமி – அதை மீட்க அந்தக் கிராமமே ஒன்று திரண்டு போராடும் ஒற்றுமை – அரசியல்வாதிகள், அதிகாரிகள், காவல் துறையினரின் இடையூறுகள் – இவையெல்லாவற்றையும் மீறி, குழியில் சிக்கிக் கொண்ட சிறுமியை மீட்க, வழக்கமான அரசு அதிகாரிகளுக்கான நடைமுறைகளை மீறி அறப்போராட்டம் நடத்தும் அந்த மாவட்ட ஆட்சியாளர் (கலெக்டர்) மதிவதனி (நயன்தாரா) – அதற்காக அவர் எதிர்நோக்கும் மேலதிகாரியின் ஒழுங்கு நடவடிக்கை – போன்ற அனைத்து அம்சங்களையும் ஒரே நேர்கோட்டில் கொண்டுவந்து இணைத்துப் பயணிக்கின்றது ’அறம்’.
அதற்கேற்பவே, இந்தப் படத்திலும், படம் முழுக்க தண்ணீர்ப் பிரச்சனையையும், கிராமத்தில் தாக்கம் ஏற்படுத்தும் பல்வேறு பிரச்சனைகளையும் விரிவாக எடுத்துக் கூறியிருக்கிறார் கோபி நயினார். ஆழ்துளைக் கிணறு குறித்த பல்வேறு விவரங்களை – கடந்த காலத்தில் நடந்த பல்வேறு உண்மைச் சம்பவங்களை ஆராய்ந்து, திரைக்கதையை அமைத்திருப்பது இயக்குநரின் உழைப்பைப் பறைசாற்றுகிறது. அதிலும் இந்தியாவின் விண்கலத் தொழில் நுட்பத்தையும், அதன் மேன்மையையும் பாராட்டும் அதே வேளையில், ஆழ்துளைக் கிணறு என்று வரும்போதும், அதில் குழந்தைகள் சிக்கிக் கொள்ளும்போதும், அதற்கேற்ற தொழில்நுட்ப முன்னேற்றம் கிராமங்களைச் சென்றடையாததைச் சாடியிருப்பதும் நல்ல ஒப்பீட்டு உத்தி.
ஆழ்துளைக் கிணறு மட்டும் என்றில்லாமல், கிராமத்தினர் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சனைகளையும் அலசி ஆராய்ந்திருப்பதால், படம் முழுக்க அறிவுரைகளோடு கூடிய பிரச்சார நெடி வீசுகிறது. இதைத் தவிர்த்திருக்கலாம்.
நடிப்பு
படம் முழுக்க, நயன்தாரா அணிந்திருப்பது இரண்டே இரண்டு வண்ணங்களிலான சேலைகள்தான். அதுவும் சாதாரண பருத்திப் (காட்டன்) புடவைகள். மிகவும் எளிமையான ஒப்பனை. அதற்காகவே, நயன்தாராவுக்கு பாராட்டுகள் தெரிவிக்கலாம். எந்தவிதத்திலும் சமரசம் செய்துகொள்ளாமல் கதாபாத்திரத்தின் தேவைக்கேற்ப நடித்திருக்கிறார் நயன்!
தாயாக வரும் சுனு இலட்சுமியும் தாயின் தவிப்பை வெளிக் கொணரும் சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்.
காக்கா முட்டை படத்தில் நடித்த இரண்டு சிறுவர்களும் இந்தப் படத்திலும் இணைந்து சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.


ஒரே பிரச்சனையை மையமாக வைத்து, சம்பவங்களால் நீட்டித்துக் கொண்டே போவதும், தீர்வை நோக்கி நகராமல் சம்பந்தப்பட்ட மனிதர்களின் உட்பூசல்களை அளவுக்கதிகமாகக் காட்டுவதும், அளவுக்கதிகமானப் பிரச்சார நெடியும், படத்தைக் கொஞ்சம் தொய்வடையச் செய்கின்றன.
இருப்பினும், நயன்தாராவின் தனித்துவமான கம்பீர நடிப்பு – பின்தங்கிய கிராமத்தின் பிரச்சனைகளை அலசி ஆராய்ந்த விதம் – கூர்மையாக சமூகப் பிரச்சனையை அணுகியது – இயல்பான, யதார்த்தமான நடிப்பு – சினிமா வியாபாரத்திற்காக எந்தவித சமரசமும் செய்துகொள்ள திரைக்கதை – இப்படியாக பலவிதங்களிலும் சிறந்து நிற்கும் ‘அறம்’ கண்டிப்பாக ஒருமுறை பார்க்க வேண்டிய படம்.
எல்லாம் சரி! ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுமி என்னவானார்? காப்பாற்றப்பட்டாரா?
படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்!