Home கலை உலகம் திரைவிமர்சனம்: ‘இப்படை வெல்லும்’ – விறுவிறுப்புடன் காமெடியும் கலந்த படம்!

திரைவிமர்சனம்: ‘இப்படை வெல்லும்’ – விறுவிறுப்புடன் காமெடியும் கலந்த படம்!

1382
0
SHARE
Ad

Ippadai-Vellum-first-lookகோலாலம்பூர் – கௌரவ் நாராயணன் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன், சூரி, ராதிகா, டேனியல் பாலாஜி, ஆர்.கே.சுரேஸ், ஹரிதாஸ், ஸ்ரீமன் உள்ளிட்டோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் ‘இப்படை வெல்லும்’ திகிலும், காமெடியும் நிறைந்த திரைப்படமாக உருவாகியிருக்கிறது.

முதற்பாதியில், சிறையில் இருந்து தப்பிக்கும் தீவிரவாதி சோட்டா (டேனியல் பாலாஜி) ஹைதராபாத்தில் பல இடங்களில் வெடிகுண்டு வைத்துவிட்டு சென்னைக்குத் தப்பி வந்துவிடுகிறார்.

சென்னையில் சில முக்கிய இடங்களில் குண்டு வைக்கத் திட்டம் தீட்டிக் கொண்டிருக்கையில், கதாநாயகன் உதயநிதியும், சூரியும், சோட்டா தீவிரவாதி என்றே தெரியாமல் உதவி செய்து காவல்துறையிடம் சிக்கிக் கொள்கின்றனர்.

#TamilSchoolmychoice

பயங்கரவாதியாகக் குற்றம்சாட்டப்படும் உதயநிதியும், சூரியும் அந்தக் குற்றச்சாட்டில் இருந்து தப்பித்தார்களா? உண்மையான குற்றவாளியான சோட்டா போலீசிடம் சிக்கினானா? என்பது தான் படத்தின் பிற்பாதி சுவாரசியம்.

உதயநிதி, மஞ்சிமா மோகன் நன்றாக நடித்திருக்கிறார்கள். ஒரு திகில் படத்திற்கான கதையில் எந்த அளவிற்கு காதல் தேவையோ அதனைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

மஞ்சிமாவின் அண்ணனாக வரும் ஆர்.கே.சுரேஸ் மிரட்டலான காவல்துறை அதிகாரியாக நன்றாக நடித்திருக்கிறார். அவருடன் மலேசிய நடிகர் ஹரிதாசும், ஸ்ரீமனும் ரசிக்க வைக்கின்றார்கள்.

டேனியல் பாலாஜியின் முரட்டுத் தோற்றமும், உடல்மொழியும் அக்கதாப்பாத்திரத்தில் நன்றாகப் பொருந்தியிருக்கிறது.

ராதிகா பெண் பேருந்து ஓட்டுநராக நடித்து கவர்கிறார். பாசமிகு தாயாக அவரது நடிப்பு ஈர்க்கிறது.

படத்தின் திரைக்கதையைப் பொறுத்தவரையில், முதற்பாதியில் ஒரு பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்குகிறது. அதன் பின்னர் உதயநிதி, மஞ்சிமா மோகன் காதல் ஒருபக்கம், உதயநிதியின் குடும்பம் ஒரு பக்கம், சூரியின் குடும்பம் ஒரு பக்கம் என காட்டி பல முடிச்சுகளைப் போடுகின்றனர்.

ஆனால், இரண்டாம் பாதி அம்முடிச்சுகளை அவிழ்க்கும் போது படத்தின் தீவிரம் மெல்லக் குறைந்துவிடுகின்றது. சூரியின் மனைவி கதாப்பாத்திரம், ராதிகா ஆகியோரை முதற்பாதியில் எதிர்பார்ப்போடு காட்டிவிட்டு, இரண்டாம் பாதியில் அழுத்தமாக எதையும் சொல்லாமல் அப்படியே நகர்ந்து விடுகிறது திரைக்கதை அமைப்பு.

என்றாலும், கிளைமாக்சை நெருங்கும் போது, கதை வேகம் பிடித்து, இனிதே முடிகின்றது. குறிப்பாக, அந்த ‘பாஸ்வேர்ட்’ காட்சிகள், அடுக்குமாடியைக் கண்டுபிடிக்கும் காட்சி, அங்கு நடக்கும் சண்டைக்காட்சி உள்ளிட்டவைகள் இரண்டாம் பாதியில் ரசிக்க வைக்கும் இடங்களாக அமைகின்றன.

ரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவில் காட்சிகள் அருமை. டி.இமான் பின்னணி இசையும், பாடல்களும் அருமை. குலேபா பாடல் மனதில் ஒட்டிக் கொள்கிறது. அப்பாடலின் இசையையே பல இடங்களில் பின்னணி இசையாக வந்திருப்பது அழகு. மலேசியப் பாடகர் குமரேசனை இப்பாடலின் வழி டி.இமான் கோலிவுட்டில் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

மொத்தத்தில், ‘இப்படை வெல்லும்’ – விறுவிறுப்புடன் காமெடியும் கலந்த படம்!

-ஃபீனிக்ஸ்தாசன்