சென்னை – நடிகை லட்சுமி பிரியா சந்திரமௌலி முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ‘லக்ஷ்மி’ என்ற குறும்படம் கடந்த நவம்பர் 1-ம் தேதி, இயக்குநர் கௌதம் மேனனின் ‘ஒன்றாக எண்டர்டெயிண்மெண்ட்’ என்ற யூடியூப் பக்கத்தில் வெளியானது.
முதலில் ஒரு சாதாரண குறும்படமாகப் பார்க்கப்பட்ட இது, தற்போது இணையவாசிகளிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
சர்ச்சைக்கான காரணம் என்னவென்றால், கதைப்படி நடுத்தரக் குடும்பத்துப் பெண்ணான லக்ஷ்மி, தினமும் காலையில் எழுந்து சமைத்து, கணவனுக்கும், குழந்தைக்கும் பணிவிடை செய்து, பின்னர் குளித்துக் கிளம்பி அச்சு வேலைக்குச் சென்று, அது முடிந்து வீட்டுக்கு வந்து மீண்டும் சமைத்து கணவன், குழந்தைக்கு உணவு பரிமாறி, பின்னர் குழந்தை உறங்கியவுடன் கணவனின் தேவைகளையும் நிறைவு செய்து உறங்கச் செல்கிறார்.
இதையே ஒரு எந்திரம் போல் தினமும் செய்கிறார். ஆனால் அதற்காக கணவரிடமிருந்து அவள் எதிர்பார்க்கும் அன்பான வார்த்தைகளோ அல்லது சிறு பாராட்டோ கூட கிடைக்கவில்லை.
இந்நிலையில், லக்ஷ்மிக்கு வேறு ஒரு ஆண் நண்பர் கிடைக்க அவருடன் நெருங்கிப் பழகி படுக்கை வரைக்கும் சென்று விடுகிறார் இது தான் கதை.
லக்ஷ்மியின் இந்தப் புதிய உறவுக்குப் பின்னணியாக பாரதியின் வரிகளைப் பயன்படுத்தியிருக்கின்றார் இயக்குநர் சர்ஜுன் கேஎம். அங்கு தான் சர்ச்சை ஆரம்பித்திருக்கிறது.
கள்ள உறவுக்கு எதற்கு பாரதியின் வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது? என்ற கேள்வியோடு இந்தக் குறும்படத்தை இணையவாசிகள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
என்றாலும், இந்தக் குறும்படத்திற்கு உலக அளவில் பல விருதுகளும் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.