மணிலா – நாளை திங்கட்கிழமை மணிலாவில் தொடங்கும் ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் வருகை தந்து, மற்ற ஆசியான் தலைவர்களுடன் இணைந்து கொள்வர்.
ஏபெக் (Asia-Pacific Economic Cooperation – ஆசியா பசிபிக் பொருளாதார மண்டலம்) மாநாட்டில் கலந்து கொள்ள வியட்னாமுக்கு வருகை தந்த டிரம்ப், அங்கிருந்து மணிலா வந்தடைகிறார். அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆசிய நாடுகளுக்கான வருகையின் ஒரு பகுதியாக அவரது மணிலா வருகை அமைகிறது.
மோடி இன்று ஞாயிற்றுக்கிழமை புதுடில்லியிலிருந்து மணிலா வந்தடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் நஜிப் துன் ரசாக்கும் வியட்னாமில் நடைபெறும் ஏபெக் மாநாட்டில் கலந்து கொண்டு மணிலா வந்தடைகிறார்.
ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபேயும் இந்த மாநாட்டில் கலந்து கொள்கின்றார்.
தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியான் மாநாட்டில், இந்த வட்டாரம் சவாலாக எதிர்நோக்கும் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் நவம்பர் 13 மற்றும் 14-ஆம் தேதிகளில் கிழக்கு ஆசியா உச்சநிலை மாநாடும் மணிலாவில் நடைபெறுகிறது. ஆசியான் மற்றும் 8 வட்டார நாடுகள் இணைந்த இந்த கூட்டமைப்பு கூட்டத்திலும் கலந்து கொள்ள பல தலைவர்கள் வருகை தரவிருக்கின்றனர்.
சீனப் பிரதமர் லீ கெகியாங், இரஷியப் பிரதமர் டிமிட்ரி மெட்வெடெவ் ஆகியோரும் மணிலாவுக்கு வருகை தரவிருக்கின்றனர்.
இந்த தலைவர்களுக்கிடையில் பல்வேறு தனிப்பட்ட சந்திப்புகள் மணிலாவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.