சென்னை – முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணத்தை விசாரணை செய்ய முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
அதன் படி, நேற்று புதன்கிழமை ஆறுமுகசாமி விசாரணையைத் தொடங்கினார்.
நேற்று நடைபெற்ற விசாரணையில், திமுகவை சேர்ந்த மருத்துவர் சரவணன் பங்கேற்று, ஜெயலலிதா டிசம்பர் 5-ம் தேதிக்கு முன்னரே இறந்திருக்கலாம் என்று தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் தேர்தலின் போது, அதிமுக வேட்பாளர் தாக்கல் செய்த வேட்பு மனுவில், ஜெயலலிதாவின் கைரேகை தெளிவில்லாமல் இருந்ததாகவும், உயிரிழந்தவர்களின் கைரேகை தான் அவ்வாறு இருக்கும் மருத்துவர் சரவணன் குறிப்பிட்டார்.
இதனிடையே, இன்று வியாழக்கிழமை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர் நாராயணபாபு மற்றும் மருத்துவர் மயில்வாகனன் ஆகியோர் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருக்கின்றனர்.
அவர்கள், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்து விளக்கமளிப்பார்கள் என்று கூறப்படுகின்றது.
இதனிடையே, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்னும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாமல் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.