Home நாடு “14-வது பொதுத் தேர்தலில் போட்டியா? கேவியஸ் முடிவு செய்வார்” – லோகா பாலமோகன்

“14-வது பொதுத் தேர்தலில் போட்டியா? கேவியஸ் முடிவு செய்வார்” – லோகா பாலமோகன்

940
0
SHARE
Ad

Loga Bala Mohan 2கோலாலம்பூர் – கூட்டரசுப் பிரதேசத்தில் தேசிய முன்னணியின் கீழ், தற்போது கெராக்கான் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் பத்து நாடாளுமன்றத் தொகுதியில் கூட்டரசுப் பிரதேசத் துணையமைச்சர் டத்தோ லோகா பாலமோகன் (படம்) மைபிபிபி கட்சியின் சார்பாகப் போட்டியிடுவார் என்ற ஆரூடம் தமிழ் ஊடகம் ஒன்றில் இன்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து இன்று வியாழக்கிழமை விடுத்த அறிக்கையில் “வரும் பொதுத் தேர்தலில் மைபிபிபி கட்சியைப் பிரதிநிதித்து போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் முழுப் பொறுப்பையும் அதிகாரத்தையும், கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ் மட்டுமே கொண்டிருக்கிறார்” என லோகா பாலமோகன் தெரிவித்திருக்கிறார்.

“நான் மட்டுமல்ல, கட்சியின் உறுப்பினர்கள் அனைவருமே இதனை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளனர். எனவே, வரும் பொதுத் தேர்தலில் நான் எங்கு, எந்தத் தொகுதியில் போட்டியிடக் கூடும் என்ற ஆரூடங்களை முன்வைக்கவோ, முன்வைக்கப்பட்ட ஆரூடங்களுக்கு கருத்துரைக்கவோ விரும்பவில்லை” என்றும் லோகா பாலமோகன் மேலும் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“பொதுத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் இதுபோன்ற ஆரூடங்கள் வெளியிடப்படுவது இயல்பான ஒன்றுதான். ஆனால் அது குறித்து நான் பதில் அளிக்க விரும்பவில்லை. மைபிபிபி கட்சி மிகவும் கட்டுப்பாடான கட்சி. உறுப்பினர்களும், இதர பொறுப்பாளர்களும் தலைமைத்துவத்தின் மீது நம்பிக்கையாகவும், விசுவாசமாகவும் இருக்கும் கட்சி. கட்சித் தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ் என்ன முடிவு செய்கிறாரோ அதனை மனப்பூர்வமாக ஏற்று வேட்பாளராக அறிவிக்கப்பட்டவரின் வெற்றியை உறுதி செய்ய உழைக்கத் தயாராக இருக்கும் உறுப்பினர்களைக் கொண்ட கட்சி மைபிபிபி. ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட கட்சித் தலைவர் பரிந்துரைத்தால் அதனை ஏற்று செயல்படத் தயாராவோம். இது எனக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் பொருந்தும்” என்றும் லோகா பாலமோகன் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

“எனவே, எந்தத் தொகுதியில் நான் போட்டியிடுவேன் என்பது பற்றியோ ஆரூடமாக வெளியிடப்பட்ட செய்தி குறித்தோ கருத்துச் சொல்ல எதுவும் இல்லை” என்றும் கூட்டரசுப்பிரதேச துணையமைச்சர் டத்தோ லோகா பாலமோகன் தெரிவித்திருக்கிறார்.