சென்னை -மதுரையைச் சேர்ந்த அன்புச்செழியன் என்பவரிடம் கந்து வட்டிக்குக் கடன் வாங்கிவிட்டு, கடனைத் திரும்பக் கேட்டு அவர் கொடுத்த தொல்லைகளையும், அவமானங்களையும் தாங்க முடியாமல், நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை தூக்கிலிட்டுத் தற்கொலை செய்து கொண்டார் தயாரிப்பாளர் அசோக் குமார்.
அசோக் குமார் நடிகர் சசிகுமாரின் அத்தை மகன் என்பதோடு, கம்பெனி புரோடக்சன்ஸ் நிறுவனத்தின் இணை தயாரிப்பாளரும் ஆவார்.
இந்நிலையில், தற்கொலை செய்து கொள்வதற்கு அன்புச்செழியன் தான் காரணம் என அசோக் குமார் கடிதம் எழுதி வைத்திருந்தார்.
அதன் அடிப்படையில், நடிகர் சசிகுமார் அளித்த போலீஸ் புகாரை ஏற்ற காவல்துறையினர் தனிப்படை அமைத்து அன்புச்செழியனைத் தேடி வருகின்றனர்.
இதனிடையே, ஏற்கனவே அன்புச்செழியன் போன்றோரிடம் கடன் வாங்கி தாங்கள் அடைந்த துன்பங்கள், இழந்த சொத்துகள் குறித்து நடிகர் பார்த்திபன், இயக்குநர் சுசீந்தரன் உள்பட பலர் வெளிப்படையாகப் பேசி வருகின்றனர்.
நடிகர் அஜித்தைக் கூட அன்புச்செழியன் மிரட்டினார் என இயக்குநர் சுசீந்தரன் கூறிய கருத்து தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த 2003-ம் ஆண்டு, இயக்குநர் மணிரத்னத்தின் சகோதரர் ஜீவி தற்கொலை செய்து கொண்டற்குக் கூட அன்புச்செழியன் தான் காரணம் எனக் கூறப்படுகின்றது.
இந்நிலையில், இயக்குநர் சீனு இராமசாமி தனது டுவிட்டரில் தெரிவித்திருக்கும் கருத்து பலரையும் கேள்விக்குறியாக்கியிருக்கிறது.
“அன்புச்செழியன் போன்ற உத்தமர்கள் தவறாகச் சித்தரிக்கப்படுவது வேதனையளிக்கிறது. நான் நியாயத்தின் பக்கமே” என்று இயக்குநர் சீனு இராமசாமி தெரிவித்திருக்கிறார்.