சென்னை – ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான அதிகாரபூர்வ முடிவுகளின்படி சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்ட டிடிவி தினகரன் மொத்தம் 89,013 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இரண்டாவது நிலையில் அதிமுகவின் மதுசூதனன் 48,306 வாக்குகள் பெற்றார்.
இதன் மூலம் 40,707 வாக்குகள் பெரும்பான்மையில் தினகரன் வெற்றி பெற்று தமிழக அரசியலில் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்தியிருப்பதோடு, தமிழக அரசியலின் அடுத்தக் கட்ட பாதையையும், பயணத்தையும் அதிரடியாக மாற்றியமைத்துள்ளார்.
கடந்த இரண்டு தேர்தல்களில் ஆர்.கே.நகர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயலலிதா பெற்ற பெரும்பான்மையை விட கூடுதல் பெரும்பான்மையைப் பெற்று – அதிலும் சுயேச்சை வேட்பாளராக – அறிமுகம் இல்லாத குக்கர் எனப்படும் மின்அடுப்பு சின்னத்தின் கீழ் போட்டியிட்டு – தினகரன் வென்றிருக்கின்றார்.
19 சுற்று வாக்கு எண்ணிக்கையில் அனைத்து சுற்றுகளிலும் தினகரனே முன்னணியில் இருந்து வெற்றி பெற்றிருப்பதால், இந்த வெற்றி மிகத் தெளிவான வெற்றியாக அமைந்துவிட்டது.
திமுக 24,651 வாக்குகள் பெற்று மூன்றாவது நிலையை அடைந்திருக்கிறது. இந்த வாக்குகளின் மூலம் திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் கட்டுத் தொகையை (டிபாசிட்) இழந்திருக்கின்றன.
தமிழக வரலாற்றில் இதுவரையில் சட்டமன்ற இடைத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு வென்றவர் யாருமில்லை என்பதால் தினகரனின் வெற்றி வரலாற்றுபூர்வமானதாகப் பார்க்கப்படுகிறது.
தினகரனின் வெற்றி தமிழக அரசியலின் பார்வையையும் அடுத்த கட்ட காய் நகர்த்தலுக்கான அரசியல் வியூகங்களையும் ஒரேயடியாக மாற்றியமைத்திருக்கிறது என்றால் அது மிகையாகாது.
பணத்தால் தினகரன் வெற்றி பெற்றார் என்று குறை கூறப்பட்டாலும், வெறும் பண விநியோகத்தால் மட்டுமே ஒரு வேட்பாளர் இத்தனை பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றிருக்க முடியாது என்பதுதான் அரசியல் பார்வையாளர்களின் ஒட்டுமொத்தக் கருத்தாகும்.
திமுகவின் அதிர்ச்சி தரும் தோல்வி
ஆர்.கே.நகரில் திமுக டிபாசிட்டை இழந்து அதிர்ச்சி தரும் தோல்வியைச் சந்தித்திருப்பதும் ஓர் அரசியல் திருப்பு முனையாகும்.
காரணம் நேற்று வரை, 2-ஜி வழக்கில், ஆ.இராசா, கனிமொழி விடுதலையைக் கொண்டாடி மகிழ்ந்த திமுக கூடாரம் ஒரே நாளில் சோகத்தில் மூழ்கும் வண்ணம் ஆர்.கே.நகரின் முடிவுகள் அவர்களுக்கு நெற்றிப் பொட்டில் அறைந்தாற் போல் அமைந்திருக்கின்றன.
தந்தி தொலைக்காட்சி அண்மையில் நடத்திய கருத்துக் கணிப்பில் 2-ஜி வழக்கின் முடிவுகள் ஆர்.கே.நகர் தொகுதியின் தேர்தல் முடிவுகளை எந்தவிதத்திலும் பாதிக்காது என்ற கருத்துகள் எதிரொலித்தன. அதன்படியே 2-ஜி வழக்கின் முடிவு ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடந்த அன்றே வெளியிடப்பட்டாலும், அந்த முடிவு அந்தத் தொகுதியின் வாக்காளர்களின் மனநிலையை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
மு.க.ஸ்டாலினின் தலைமைத்துவத்திற்கும் இந்தத் தோல்வி பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. அடுத்த முதல்வர் தளபதிதான் என அடித்துக் கூறியவர்கள் எல்லாம் இனி அடக்கி வாசிக்க வேண்டியிருக்கும்.
அதிலும் வைகோவின் மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் என மற்ற கட்சிகள் ஆதரவு கொடுத்தும் திமுக இந்த அளவுக்கு மோசமான தோல்வியைத் தழுவியிருப்பது பல கேள்விகளை எழுப்பியிருக்கின்றது.
ஒருவேளை வைகோவின் இராசியாக இருக்குமோ?
-இரா.முத்தரசன்