கோலாலம்பூர் – ஸ்ரீபந்தாய் பிபிஆர் அடுக்குமாடிக் குடியிருப்பில் கடந்த வாரம், 16-வது மாடியிலிருந்து அலுவலக நாற்காலி ஒன்று விழுந்ததில், 15 வயது சிறுவன் சதீஸ்வரன் மரணமடைந்தார்.
இந்த வழக்கில், அந்த அடுக்குமாடிக் குடியிருப்பைச் சேர்ந்த 43 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி, அதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 நபர்களை சந்தேக நபர்களாக விசாரித்து வந்தனர்.
இதனிடையே, அவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் எந்த ஒரு தகவலும் வராததையடுத்து, அவர்கள் 5 பேரும் விடுவிக்கப்பட்டதாக கோலாலம்பூர் குற்றப்புலனாய்வு துறையின் மூத்த தலைமை துணை ஆணையர் ருஸ்டி முகமட் இசா தெரிவித்திருக்கிறார்.
அவர்கள் 5 பேரிடமும் உண்மையைக் கூற வைக்கும் குரல் பகுப்பாய்வுச் சோதனைகள் உட்பட சோதித்துப் பார்த்தும் அவர்களிடமிருந்து எந்தத் தகவலையும் பெற முடியவில்லை என்றும் ருஸ்டி முகமட் இசா குறிப்பிட்டிருக்கிறார்.
இந்நிலையில், அந்த நாற்காலி, மரபணுக்களைக் கைப்பற்றும் சோதனைக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும், அதன் முடிவு இன்னும் சில தினங்களில் கிடைத்துவிடும் என்றும் ருஸ்டி தெரிவித்திருக்கிறார்.
அதன் முடிவுகள் வந்த பின்னர், இவ்வழக்கு சில முன்னேற்றங்கள் ஏற்படலாம் என்றும் ருஸ்டி குறிப்பிட்டிருக்கிறார்.