கோலாலம்பூர் – ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ ஆர்.நடராஜா தமிழ் மலர் நாளிதழுக்கு எதிராகத் தொடுத்திருந்த அவதூறு வழக்கில் நேற்று வெள்ளிக்கிழமை கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
அந்த தீர்ப்பின்படி தமிழ் மலர் நாளிதழின் வெளியீட்டாளரான சிட்டி டீம் மீடியா நிறுவனம் 3 இலட்சம் ரிங்கிட்டும், தமிழ் மலர் நிர்வாகி டத்தோ எஸ்.எம். பெரியசாமி 2 இலட்சம் ரிங்கிட்டும், செய்திக் கட்டுரையை எழுதிய பா.இராஜேஸ் 70 ஆயிரம் ரிங்கிட்டும் டான்ஸ்ரீ நடராஜாவுக்கு நஷ்ட ஈடாக செலுத்த வேண்டும் என கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி டத்தோ முகமட் சாக்கி அப்துல் வஹாப் உத்தரவிட்டார்.
வழக்கில் செலவுத் தொகை குறித்த இருதரப்பு வாதங்களையும் செவிமெடுத்த நீதிபதி, செலவுத் தொகையைப் பிரதிவாதிகள் செலுத்த வேண்டுமா இல்லையா என்பதை எதிர்வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.
இதற்கிடையில் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக தமிழ் மலர் பத்திரிக்கை அறிவித்திருக்கிறது.
டான்ஸ்ரீ நடராஜாவின் தோற்றத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செய்திக் கட்டுரைகள் எழுதப்பட்டதாக தமிழ் மலர் பத்திரிக்கையின் மீது டான்ஸ்ரீ நடராஜா தொடுத்திருந்த வழக்கில் விசாரணைகள் நடைபெற்று நேற்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் மொத்தம் 580,000 ரிங்கிட் நஷ்ட ஈட்டை தமிழ் மலர் நிர்வாகம் நடராஜாவுக்கு வழங்க வேண்டுமென தீர்ப்பளித்திருக்கிறது.
பூச்சோங் முரளி வழக்கிலும் டான்ஸ்ரீ நடராஜாவுக்கு வெற்றி
இதற்கிடையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை (25 ஜனவரி 2018) டான்ஸ்ரீ நடராஜா, பூச்சோங் முரளி என்பவருக்கு எதிராகத் தொடுத்திருந்த மற்றொரு அவதூறு வழக்கிலும் வெற்றி பெற்றிருக்கிறார்.
ஏற்கனவே அந்த வழக்கில் கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் நடராஜாவுக்கு சாதகமாகத் தீர்ப்பளித்திருந்தாலும், அதனை எதிர்த்து முரளி மேல்முறையீடு செய்திருந்தார். ஜனவரி 25-ஆம் தேதி கூட்டரசு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் முறையீடு செய்வதற்காக முரளி அனுமதி கோரி விண்ணப்பத்திருந்தார். எனினும் முரளியின் விண்ணப்பத்தை கூட்டரசு மேல்முறையீட்டு நீதிமன்றம் 10,000 ரிங்கிட் செலவுத் தொகையுடன் தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியது.