கியூபா நாட்டின் முன்னாள் அதிபரும் புரட்சியாளருமான அமரர் பிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகன் பிடல் ஏஞ்சல் காஸ்ட்ரோ டயாஸ் பாலார், வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.
68 வயதான அவர், கடந்த சில மாதங்களாக மிக மோசமான மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதற்காக சிகிச்சைகளை எடுத்து வந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.
முன்னாள் சோவியத் யூனியனால் பயிற்றுவிக்கப்பட்ட அணுசக்தி இயற்பியல் வல்லுநரான பிடல் ஏஞ்சல் காஸ்ட்ரோ டயாஸ் பாலார், கியூபா தேசிய கவுன்சிலின் விஞ்ஞான ஆலோசகராகச் செயல்பட்டு வந்ததோடு, கியூபா அறிவியல் கல்வி நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் பணியாற்றி வந்தார்.
கடந்த 1980 முதல் 1992-ம் ஆண்டு வரை, கியூபாவின் அணுசக்தி திட்டத்திற்குத் தலைமை வகித்து வந்தார். பின்னர் சோவியத் யூனியன் சரிந்தவுடன் அத்திட்டம் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.