கோலாலம்பூர் – காரில் வைத்து ஆடவர் ஒருவரால் டி.தாரணி (வயது 37) குத்திக் கொலை செய்யப்பட்டதற்குக் காரணம், அந்த ஆடவரின் திருமண வேண்டுகோளை தாரணி ஏற்க மறுத்தது தான் என காவல்துறை நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்திருக்கிறது.
“அந்த நபர் தன்னைத் திருமணம் செய்யுமாறு தாரணியிடம் கேட்டிருக்கிறார். ஆனால் தாரணி அதற்கு மறுத்ததோடு, வேறு ஒருவரைத் திருமணம் செய்யவிரும்புவதாகத் தெரிவித்திருக்கிறார்” என்று ஓசிபிடி துணை ஆணையர் முகமது ஜானி சே டின் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கொலை செய்த அந்த ஆடவரும், தாரணியும் ஒரே இடத்தில் வேலை செய்ததாகவும், இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக நட்பில் இருந்ததாகவும் கூறப்படுகின்றது.
இதனிடையே, நேற்று கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் அந்த ஆடவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல் அளித்து உத்தரவு பிறப்பித்தது நீதிமன்றம்.
கடந்த திங்கட்கிழமை, டாமன்சாராவில் உள்ள வணிக வளாகம் ஒன்றின் கார் நிறுத்துமிடத்தில் வைத்து தனது காதலியைக் கொலை செய்துவிட்டதாகக் கூறி 37 வயது ஆடவர், சடலத்துடன் காவல்நிலையத்தில் சரணடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.