கோலாலம்பூர் – என்எஃப்சி (National Feedlot Corporation) ஊழல் தொடர்பான இரகசிய வங்கி ஆவணங்களை வெளியிட்ட குற்றத்திற்காக பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரஃபிசி ரம்லிக்கு அமர்வு நீதிமன்றம் இன்று புதன்கிழமை 30 மாத சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.
அரசியல் சாசனத்தின் படி, ஓராண்டுக்கு மேலாக சிறைத் தண்டனை பெறுபவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதால், இன்னும் சில மாதங்களில் நடைபெறவிருக்கும் 14-வது பொதுத்தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை ரபிசி இழந்திருக்கிறார்.
இது குறித்து வழக்கறிஞர் டத்தோ ஹஸ்னால் ரேசுவா மெரிக்கன் கூறுகையில், “சட்டப்படி, ஓராண்டுக்கும் மேலாக சிறைத்தண்டனை பெரும் தனிநபர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது. ரபிசி தனது தண்டனையைக் குறைக்கச் சொல்லி மேல்முறையீடு செய்தாலும் கூட, 14-வது பொதுத்தேர்தலுக்குள் முடிவுகள் வந்துவிடாது. எனவே ரபிசி தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழக்கிறார். இது தான் நடப்புச் சட்டம்” எனத் தெரிவித்திருக்கிறார்.
13-வது பொதுத்தேர்தலில் பாண்டான் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட ரபிசி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மசீச, சுயேட்சை வேட்பாளர்களை விட 26,729 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.