Home வணிகம்/தொழில் நுட்பம் மைக்குரோசாப்ட் பிங் – இனித் தமிழ் வரிகளையும் வாசிக்கும்!

மைக்குரோசாப்ட் பிங் – இனித் தமிழ் வரிகளையும் வாசிக்கும்!

1630
0
SHARE
Ad

மைக்குரோசாப்ட் பிங் வரி-ஒலி வடிவ மாற்றுத் தொழில்நுட்பம், இனி தமிழில் உள்ள வரிகளையும் வாசிக்கும் என்று மைக்குரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

வரி-ஒலி வடிவ மாற்றுத் தொழில்நுட்பம் (text-to-speech) என்பது வெற்றெழுத்துகளை உள்வாங்கி, ஒரு மனிதர் அவற்றை வாசிப்பதுபோல், ஒரு மின்னுட்பக் கருவி நமக்கு வாசித்துக் காட்டுவது.

புதிய நுட்பம் அல்ல, ஆனால் நாளுக்கு நாள் மேம்பாடு அடைந்து வரும் நுட்பம். பயன்பாடும் கூடிக்கொண்டே வரும் நுட்பம்.

#TamilSchoolmychoice

கூகுளின் குரல் வழி உள்ளீடு குறித்து ஏற்கனவே ஒரு பதிவை வெளியிட்டிருந்தோம். அது, எதிர்திசையில் செல்வது. அதாவது, ஒலியில் இருந்து வரிவடிவத்திற்கு மாற்றும் நுட்பம்.

இந்த நுட்பங்களை, குறிப்பாக வரி-ஒலி மாற்றத்தை, தமிழுக்குக் கொண்டுவர வேண்டும் என்று பலர் பல காலமாகவே முயன்று வருகின்றனர். ஓரளவு வெற்றியும் அடைந்துள்ளனர். குறிப்பிட்ட சில செயல்பாடுகளும் ஆங்காங்கே வெளிவந்துள்ளன.

இருந்தாலும், இந்த முயற்சிகள் பெருமளவு பொதுப் பயனீட்டிற்கு வந்தடையவில்லை. இதற்கு வழிவகுக்கும் வகையில் மைக்குரோசாப்ட் நிறுவனம் கடந்த வாரம் ஓர் அறிவிப்பைச் செய்தது.

மைக்குரோசாப்ட் பிங்

மைக்குரோசாப்ட் பிங் வரி-ஒலி வடிவ மாற்றுத் தொழில்நுட்பத்தில், தமிழ் உட்பட 6 புதிய மொழிகள் சேர்க்கப்பட்டன. பல்கேரிய, குரோசிய, மலாய், சிலோவேனிய மற்றும் வியாட்னாமிய மொழிகளே மற்ற ஐந்தும்.

இந்தச் சேர்க்கையோடு, மொத்தம் 34 மொழிகளில் இந்த நுட்பம் மைக்குரோசாப்ட் பிங் திட்டத்தின் கீழ் கிடைக்கின்றது.

இதில் கிடைக்கும் முதன்மையான நன்மை என்னவெனில், மென்பொருள் மேம்பாட்டாளர்கள் தங்களின் உருவாக்கங்களில் இந்த வரி-ஒலி வடிவ மாற்று நுட்பத்தை இணைத்துக் கொள்ளலாம் என்பதே. இணையம் வழியாக இயங்கும் செயலிகளிலும், கணினி திறன்பேசிகளுக்காக உருவாக்கப்படும் செயலிகளிலும் இனி தமிழ் வாசிப்பைச் சேர்ப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

இந்த நுட்பம் மட்டும் அல்லாமல், மற்ற மொழி சார்ந்த நுட்பங்களையும் மைக்குரோசாப்ட் மேம்பாட்டாளர்களுக்காக வழங்குகிறது. அனைத்துமே இலவசம் இல்லாவிட்டாலும், கூகுள் நிறுவனத்தைப் போலவே பயன்பாட்டுக்கு ஏற்பக் கட்டணம் என்னும் கட்டண அமைப்பை நிறுவியுள்ளது.

குறைவானக் கட்டணங்களாக இருந்தாலும், இவை இலவச தமிழ்ச் செயலிகளுக்கு உதவுமா என்பது கேள்விக் குறியே. பொருள் ஈட்டும் நோக்கத்தோடு மென்பொருள் உருவாக்கங்களைச் செய்யும் நுட்பவியலாளர்களின் செலவை, ஈடுகட்டும் அளவுக்காவது செயலிகளைப் பயனர்கள் பணம் கொடுத்து வாங்குவார்களா என்பதே மிகப் பெரிய கேள்வி!

வேறு வழியில் பொருள் ஈட்டும் வாய்ப்புக் கிடைக்குமா என்றும் மேம்பாட்டாளர்கள் ஆராய்வர்.

கடந்த பதிவில் கூகுள் தனது விளம்பரத் திட்டத்தில் தமிழையும் சேர்த்திருப்பதைப் பற்றி எழுதி இருந்தோம். விளம்பரங்களுக்குப் பயனர் எண்ணிக்கை மிக மிக அவசியம். எண்ணிக்கை அதிகம் இருந்தால், செலவுகளை ஈடுகட்ட இதுவும் ஒரு வழியே.

இதுபோன்ற வசதிகளை, மைக்குரோசாப்ட் கூகுள் போன்ற நிறுவனங்கள், வணிக நோக்கத்திற்காகவே அறிமுகப் படுத்தினாலும், தமிழில் இவ்வளவு வணிக வாய்ப்புகளை இந்தப் பெரிய நிறுவனங்களே கண்டிருப்பது நமக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.

இந்த வாய்ப்புகள், அவர்களுக்கு வெற்றியைத் தருவதற்குச் சிறிய நிறுவனங்களின் உழைப்பும் தனிநபர் முயற்சிகளும் கண்டிப்பாகத் தேவை. இருகையும் தட்டினால்தானே ஓசை?

அனைவருக்குமே வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்ப்போம்! தமிழுக்குத் தொடர்ந்து கிடைக்கும் சிறப்புகளை வரவேற்போம்!

செயல்விளக்கும் பக்கம்

மைக்குரோசாப்ட் பிங் வரி-ஒலி வடிவ மாற்றுத் தொழில்நுட்பத்தைத் தட்டிப்பார்ப்பதற்காக ஒரு சிறப்புப் பக்கத்தை உருவாக்கியுள்ளேம். நீங்களும் வந்து பாருங்களேன்?

தொடர்புடையக் கட்டுரை:
1. குரல்வழித் தமிழ் உள்ளீடு – கூகுளின் வசதியை செல்லினத்திலும் பெறலாம்!
2. குரல் வழித் தமிழ் உள்ளீடு – கேள்விகளும் பதில்களும்.

இணைப்பு: பிங் வழித் தமிழில் வரி-ஒலி வடிவ மாற்றம்

நன்றி: செல்லினம்