Home நாடு “மொராயிசை நான் கொலை செய்யவில்லை” – குற்றம்சாட்டப்பட்ட தினேஸ் மன்றாடுகிறார்!

“மொராயிசை நான் கொலை செய்யவில்லை” – குற்றம்சாட்டப்பட்ட தினேஸ் மன்றாடுகிறார்!

1072
0
SHARE
Ad

கோலாலம்பூர் – அரசாங்க வழக்கறிஞர் கெவின் மொராயிஸ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான தினேஸ்வரன் (வயது 26), தான் கெவின் மொராயிசை கொலை செய்யவில்லை என்றும், எதற்காக காவல்துறைத் தன்னைக் கைது செய்து கொலைக் குற்றம் சாட்டியிருக்கிறது எனத் தெரியவில்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.

நேற்று உயர்நீதிமன்றத்தில், இந்த வழக்கு விசாரணையில் நடந்த எதிர்தரப்பு சாட்சியங்கள் ஆய்வின் போது, தலைமை வழக்கறிஞர் ராஜகோபால், தினேஸ்வரனின் குறுக்கு விசாரணை செய்தார்.

அப்போது பேசிய தினேஸ்வரன், நாளிதழில் தனது புகைப்படத்தைப் பார்த்துவிட்டு, தனது வழக்கறிஞர் மனோகரனுடன், கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் 21-ம் தேதி, தான் செந்துல் காவல்நிலையத்தில் சரணடைந்ததாக தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

நாளிதழில் தனது படத்துடன் வந்த செய்தியை படிக்கத் தெரியாததால், தனது உறவினரிடம் படித்துக் காட்டச் சொன்னதாகவும், அப்போது, தான் காவல்துறையால் தேடப்பட்டு வருவது தெரியவந்ததாகவும் தினேஸ்வரன் குறிப்பிட்டிருக்கிறார்.

இதனையடுத்து, செந்துல் காவல்நிலையத்தில் சரணடைந்த தன்னை, 1 வாரம் தடுப்புக் காவலில் வைத்த அதிகாரிகள், 2015 செப்டம்பர் 27-ம் தேதி, நீதிமன்றத்தில் நிறுத்தினர் என்றும் தினேஸ்வரன் கூறியிருக்கிறார்.

மேலும், தினேஸ்வரனுடன் குற்றம் சாட்டப்பட்ட மற்ற 5 பேரான விஸ்வநாத், ரவிச்சந்திரன், நிமலன், குணசேகரன், ஏ.கே.தினேஸ்குமார் ஆகியோரைச் சந்தித்தது குறித்து வாக்குமூலம் அளித்த தினேஸ், ஒரு கார் விற்பனை தொடர்பாக அவர்களைச் சந்தித்ததாகத் தெரிவித்திருக்கிறார்.

ரவி என்ற செல்வம் என்பவருக்குச் சொந்தமான பணிமனையை சுத்தம் செய்து கொடுக்கும் படி அவர்கள் கூறியதாகவும், அதன் படி, நிமலனுடன் அந்த இடத்திற்குச் சென்று சுத்தம் செய்ததாகவும் தினேஸ் தெரிவித்திருக்கிறார்.

மேலும், அந்த பணிமனையில் ஒரு பீப்பாய் இருந்ததாகவும், அதனை நிமலனும், செல்வமும் மிட்ஷுபிசி டிரிடான் என்ற வாகனத்தில் எடுத்துச் சென்றதாகவும், பின்னர் அவர்கள் திரும்பி வருகையில் அந்த பீப்பாய் அதில் இல்லை என்றும் தினேஸ் சாட்சியம் அளித்திருக்கிறார்.

அந்த பீப்பாய்குள் என்ன இருந்தது என்பது அப்போது தனக்குத் தெரியாது என்றும் தினேஸ் குறிப்பிட்டிருக்கிறார்.