ஜோர்ஜ் டவுன் – மலேசியாவில் வழக்கமாக காண முடியாத வித்தியாசமாக, பினாங்கு மாநிலத்தில் உள்ள ஹூ இயூ சியா (SJK(C) Hu Yew Seah) சீனப் பள்ளியின் கட்டட முகப்பில் புகழ் பெற்ற இந்திய இலக்கியவாதியும், இலக்கியத்துக்கு நோபல் பரிசு பெற்றவருமான இரபீந்திரநாத் தாகூர் அவர்களின் பிரம்மாண்டமான ஓவியம் இடம் பெற்றிருக்கிறது.
ஏன் ஓர் இந்தியக் கவிஞரின் ஓவியம் சீனப் பள்ளியில், அதுவும் மலேசியாவில் – என்ற கேள்வியும் இயல்பாகவே எழுகிறது.
1927-ஆம் ஆண்டில் இந்த சீனப் பள்ளிக்கான கட்டடத்தின் அடிக்கல் கல்லை அப்போது நாட்டியவர் தாகூர் என்பது நமக்கு ஆச்சரியமளிக்கும் தகவலாகும். அந்த ஆண்டில் தாகூர் பினாங்கு மாநிலத்துக்கு வருகை தந்தார் என்றும் வரலாறு குறிப்பிடுகின்றது.
இந்த வரலாற்றுபூர்வ தகவலை முன்னிட்டு தாகூரைக் கௌரவிக்கும் விதமாகவும், அந்தப் பழைய வரலாற்று சம்பவத்தை நினைவு கூரும் விதமாகவும் தாகூரின் ஓவியம் ஹூ இயூ சியா சீனப் பள்ளியின் கட்டட முகப்புச் சுவரில் வரையப்பட்டிருக்கிறது.
1913-ஆம் ஆண்டில் இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்ற தாகூர், அப்பரிசைப் பெற்ற முதல் இந்தியர் என்பதோடு, இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்ற ஐரோப்பியர் அல்லாத முதல் வெற்றியாளர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
அது மட்டுமல்ல, தாகூரின் ஓவியத்தோடு, அப்பள்ளியின் கட்டட முகப்பில் டாக்டர் வூ லியன் தே என்பவரின் ஓவியமும் இடம் பெற்றிருக்கிறது. பினாங்கில் பிறந்த டாக்டர் வூ 1935-ஆம் ஆண்டில் நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் மலேசியராவார் (அப்போது மலாயா).
டாக்டர் வூ பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் மருத்துவம் பயின்ற மலாயா நாட்டின் முதல் சீன வம்சாவளியினராவார். 1960-ஆம் ஆண்டில் தனது 81-வது வயதில் காலமான டாக்டர் வூ சீனாவில் ஒரு முறை ஏற்பட்ட தொற்று நோய்ப் பரவலைத் தடுக்க பெரும் பணியாற்றியிருக்கிறார்.
ஜசெகவின் பாயான் பாரு நாடாளுமன்ற உறுப்பினரான சிம் ஸீ சின் (Sim Tze Tzin) இந்த சீனப் பள்ளியின் முன்னாள் மாணவராவார். ரபீந்திரநாத் தாகூர் மற்றும் டாக்டர் வூ ஆகியோரின் ஓவியங்கள் தாங்கிய முகப்புக் கட்டடத்தின் புகைப்படத்தைத் தனது முகநூல் (பேஸ்புக்) பக்கத்திலும் பதிவிட்டிருக்கிறார். இதுபோன்று நோபல் பரிசு பெற்றவர்கள் மற்றும் நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட உள்நாட்டவர்கள் ஓவியங்களை பள்ளியின் முகப்பில் இடம் பெறச் செய்வதன் மூலம் மாணவர்களுக்கு ஊக்கமும், எதிர்காலத்தில் இதுபோன்ற சாதனைகளைப் படைக்க வேண்டும் என்ற உற்சாகமும் பிறக்கும் என்றும் சிம் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.
தாகூருக்கும் இந்த சீனப் பள்ளிக்கும் இடையிலான வரலாற்றுபூர்வ தொடர்பை தானே இப்போதுதான் அறிந்து கொண்டதாகவும் சிம் தெரிவித்திருக்கிறார்.