ஜோகூர் மாநிலத்தின் லெடாங் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் தொகுதி காம்பீர்.
நேற்று சனிக்கிழமை புக்கிட் காம்பீர் நகருக்கு வருகை தந்த மொகிதின் யாசின் அங்கு உணவகம் ஒன்றில் நடத்திய சந்திப்புக் கூட்டத்தில் தான் போட்டியிடுவதை உறுதிப்படுத்தினார்.
ஜசெக தலைவர் லிம் கிட் சியாங்கும் இந்தச் சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.


பின்னர் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் இந்தத் தகவலை மொகிதின் யாசின் மறு உறுதிப்படுத்தினார்.
“எனக்கு இங்கே நிறைய ஆதரவு இருப்பதாக உணர்கிறேன். எனவே, இங்கே ஆதரவாளர்களைக் கலந்து பேசிய பின்னர், இங்கு வருகை தந்து நிலைமைகளை கண்டறிந்த பின்னர், எனது போட்டியை உறுதிப்படுத்துகிறேன்” என மொகிதின் யாசின் கூறினார்.
எனினும் தான் போட்டியிடப் போகும் நாடாளுமன்றத் தொகுதி எது என்பதை மொகிதின் யாசின் இன்னும் அறிவிக்கவில்லை.
அநேகமாக அவர் தனது முந்தைய தொகுதியான பாகோ தொகுதியிலேயே போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிடுவதன் மூலம் ஜோகூர் மாநிலத்தை பக்காத்தான் கூட்டணி கைப்பற்றினால் மாநில மந்திரி பெசாராக மொகிதின் நியமிக்கப்படக் கூடும்.


2013 பொதுத் தேர்தலில் காம்பீர் தொகுதியில் மஇகா-தேசிய முன்னணி வேட்பாளராகப் போட்டியிட்ட அசோஜன் 310 வாக்குகள் வித்தியாசத்தில் பாஸ் கட்சி வேட்பாளரைத் தோற்கடித்தார்.
ஏறத்தாழ 53 விழுக்காடு மலாய் வாக்காளர்களைக் கொண்ட காம்பீர் சட்டமன்றத் தொகுதியில் 40 விழுக்காடு சீன வாக்காளர்கள் இருக்கின்றனர்.
ஜோகூரின் வட பகுதியில், தங்காக் நகரை உள்ளடக்கிய லெடாங் தொகுதியின் கீழ் வரும் 3 சட்டமன்றத் தொகுதிகளில் காம்பீர் ஒன்றாகும். தங்காக், செரோம் ஆகியவை மற்ற இரண்டாகும்.