Home நாடு தேர்தல் ’14: காம்பீர்: அசோஜனின் முயற்சியால் நவீன நகராக உருமாறிய தொகுதி! (பாகம் 1)

தேர்தல் ’14: காம்பீர்: அசோஜனின் முயற்சியால் நவீன நகராக உருமாறிய தொகுதி! (பாகம் 1)

2152
0
SHARE
Ad
டத்தோ எம்.அசோஜன், காம்பீர் சட்டமன்ற உறுப்பினர்

(காம்பீர் சட்டமன்றம் – ஜோகூர் மாநிலத்தில் தேசிய முன்னணி சார்பில் மஇகா போட்டியிடும் என எதிர்பார்க்கப்படும் நான்கு தொகுதிகளுள் ஒன்று. லெடாங் நாடாளுமன்றத்தின் கீழ்வரும் இந்தத் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும் டத்தோ எம்.அசோஜன் 2004 முதல் இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக எவ்வாறு இந்த வட்டாரத்தை நவீனமயமான வசதிகளுடன் உருமாற்றினார் என்பதை செல்லியல் குழு நேரடியாகப் பார்வையிட்டு வழங்கும் கண்ணோட்டம்)

கோலாலம்பூரிலிருந்து ஜோகூர் பாருவை நோக்கி நீங்கள் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் வழியே பயணம் போகும்போது, ஜோகூர் மாநில எல்லைப் பகுதிக்குள் நுழைந்ததும், கொஞ்ச நேரத்தில் புக்கிட் காம்பீர் என்ற சுங்கச் சாவடி (டோல்) வழியே சாலையொன்று பிரியும். பலர் அந்தப் பகுதிக்குள் நுழைந்திருக்கமாட்டீர்கள்!

புக்கிட் காம்பீருக்குப் பிரியும் நெடுஞ்சாலை இணைப்பு

ஆனால், ஒருமுறை நுழைந்து பார்த்தால், அசந்து போவீர்கள்!

#TamilSchoolmychoice

மக்களுக்குத் தேவையான அத்தனை வசதிகளுடன் – வங்கிகள், நவீன பேருந்து நிலையம், மொத்த விற்பனை விவசாயச் சந்தை, பள்ளிகள், பொதுமண்டபங்கள், என சொல்லிக் கொண்டே போகும் அளவுக்கு அனைத்தையும் கொண்ட ஒரு சிறு நவீன நகர் புக்கிட் காம்பீர் என்ற பெயரில் எழுந்திருப்பதைப் பார்ப்பீர்கள்.

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு சாதாரண, தகரம் வேய்ந்த வீடுகளுடன், பின்தங்கிய புறநகர் பகுதியாக இருந்த புக்கிட் காம்பீரின் இந்த நவீன உருமாற்றத்திற்கு அனைவரும் சுட்டிக் காட்டும் முக்கியக் காரணம், அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், ஜோகூர் மாநில மஇகா தலைவருமான டத்தோ எம்.அசோஜனின், திட்டமிடலுடன் கூடிய அயராத பணிகள்!

லெடாங் நாடாளுமன்றத் தொகுதியின் மைய நகராகத் திகழ்ந்து வந்த தங்காக்கை விட சிறப்பான, நவீனமயமான, கூடுதல் வசதிகளுடன் கூடிய நகராக புக்கிட் காம்பீர் முன்னேறி வருகிறது என்பது உள்ளூர் வட்டார மக்கள் பெருமிதத்துடன் குறிப்பிடுகின்றனர்.

தொகுதிக்கு வாரம் ஒருமுறையோ, நிகழ்ச்சிகளுக்கு மட்டும் வருகை தருவது என்ற நடைமுறையோ இல்லாமல், புக்கிட் காம்பீரிலேயே தனது இல்லத்தில் குடும்பத்தினருடன் வசித்துக்கொண்டு, தொகுதியின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றும் – வாக்காளர்கள் எப்போது வேண்டுமானாலும் சந்திக்கக் கூடிய சட்டமன்ற உறுப்பினராகத் திகழ்கிறார் அசோஜன் என்பது – அவரது இன்னொரு வித்தியாச முகம்!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் இந்திய வேட்பாளர்கள் களமிறங்கும் சில தொகுதிகளுக்கு நேரடியாக வருகை தந்து பார்வையிட்டு, நிலவரங்களை வெளியிடும் செல்லியல் ஊடகத்தின் முயற்சியாக அண்மையில் ஜோகூரின் காம்பீர் தொகுதிக்கு நேரடி வருகை மேற்கொண்ட போது, அசோஜனின் உழைப்பும், திட்டங்களும் புக்கிம் காம்பீர் நகரின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் ஆழமாகப் பதிந்திருப்பதைப் பார்க்க முடிகிறது.

புக்கிட் காம்பீரில் அமைந்துள்ள சமூகப் பொதுமண்டபத்தில் அமைந்துள்ள தனது சேவை அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு, தனது பணிகளைப் பட்டியலிடத் தொடங்கினார் அசோஜன்.

14 மில்லியன் ரிங்கிட் செங்காங் வட்டார சாலை விரிவாக்கம்

2004-ஆம் ஆண்டு காம்பீர் சட்டமன்ற உறுப்பினராக நுழைந்த அசோஜனின் பார்வையில் பட்ட முதல் முரண்பாடு செங்காங் வட்டாரம். “ஜாலான் மாத்தி”– (Jalan Mati) என அழைக்கப்பட்ட இந்த இடத்திலிருந்து வெளியேறுவதற்கு சாலை வசதிகள் எதுவும் அப்போது இல்லை.

நிறைவு பெறப் போகும் புதிய பாலங்களில் ஒன்று…

மாநில அரசுடன் போராடி, மந்திரி பெசாருடன் பல முறை பேச்சுவார்த்தைகள் நடத்தி, செங்காங் வட்டாரத்திலிருந்து ஜோகூரின் மற்றப் பகுதிகளுக்கு செல்லும் வகையில் சாலை இணைப்புகளை ஏற்படுத்தினார் அசோஜன்.

விளைவு? இன்று காம்பீர் செங்காங் பகுதியில் விளையும் காய்கறிகள், விவசாயப் பொருட்கள் அனைத்தும் ஜோகூரின் மற்ற பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்படும் வகையில் சாலை இணைப்பு வசதிகள் ஏற்பட்டுள்ளன.

இதன்மூலம் வட ஜோகூரின் காய்கறிகள் போன்ற விவசாயத் தேவைகளின் 40 சதவீதத்தை பூர்த்தி செய்வது காம்பீர் செங்காங்கில் விளையும் விவசாயப் பொருட்கள்தான் என்பது நமக்குக் கிடைக்கும், புதிய ஆச்சரியத் தகவல்!

நான்கு பாலங்கள் 18 மில்லியன் ரிங்கிட்டில் உருவாக்கம்

நகரில் அமைந்திருந்த சில பாலங்கள் குறுகலாகவும், அடிக்கடி விபத்துகள் ஏற்படும் வண்ணம், நெருக்கடியான வாகன நெரிசலுடன் அமைந்திருக்க, தற்போது 4 பாலங்கள் விரிவான சாலை வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன – 18 மில்லியன் ரிங்கிட் செலவில்!

இதுவும் அசோஜனின் முயற்சியால் இந்தத் தொகுதிக்குக் கிடைத்த திட்டம்!

புதிய பேருந்து நிலையம்

உள்ளூர் மக்களின் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நிர்மாணிக்கப்பட்டு இறுதிக் கட்டக் கட்டுமானப் பணிகளை அடைந்துள்ளது புக்கிட் காம்பீரின் புதிய பேருந்து (பஸ்) நிலையம்.

கட்டுமானத்தில் இருக்கும் புக்கிட் காம்பீர் புதிய பேருந்து நிலையம்

நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு, தனியார் மய அடிப்படையில் கட்டப்பட்டிருக்கிறது இந்த பேருந்து நிலையம் என்பது அதன் இன்னொரு சிறப்பு. அரசாங்கம் ஒதுக்கிய நிலத்தில் மேம்பாட்டாளர் 14 கடைவீடுகளைக் கட்டிக் கொண்டு அதற்கு மாற்றாக பேருந்து நிலையத்தை நிர்மாணித்துத் தந்திருக்கிறார் நில மேம்பாட்டாளர்.

விரைவில் திறப்பு விழா காணப்போகிறது இந்தப் பேருந்து நிலையம்.

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையிலிருந்து இணைப்பு

ஜோகூரை நோக்கிச் செல்லும் வடக்குத் தெற்கு நெடுஞ்சாலையிலிருந்து புக்கிட் காம்பீர் நகருக்கென பிரத்தியேக சாலை இணைப்பும் அசோஜனின் முயற்சியால் உருவானதாகும். நகரின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணங்களுள் ஒன்றாக இந்த இணைப்பு பார்க்கப்படுகிறது.

2012-இல் பயன்பாட்டுக்கு வந்த இந்தத் திட்டத்திற்குத் தனக்கு ஆதரவாக இருந்து, நிறைவேற்றிக் கொடுத்தவர், அப்போதைய பொதுப் பணித் துறை அமைச்சரும், மஇகா தேசியத் தலைவருமான துன் சாமிவேலு என்பதை இந்த வேளையில் நன்றியோடு நினைவு கூர்கிறார் அசோஜன்.

5 ஆண்டுகளில் 1000 வீடுகள்

அடுத்த 5 ஆண்டுகளில் புக்கிட் காம்பீர் வட்டாரத்தில் 1000 வீடுகள் நிர்மாணிக்கப்படும் என 2013 பொதுத் தேர்தலின்போது தனது தேர்தல் வாக்குறுதியாக முழங்கினார் அசோஜன். இதோ ஐந்து ஆண்டுகள் முடிந்து அடுத்த பொதுத் தேர்தல் வரும் நேரத்தில் அந்த எண்ணிக்கையை அடைந்துவிட்டதையும் பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார் அசோஜன்.

சாகில் பகுதியில் 55 ஏக்கர் வீடமைப்புத் திட்டத்தில் 500 வீடுகள் உருவாகிக் கொண்டிருக்க, இதில் 150 வீடுகள் மலிவு, நடுத்தர வீடுகளாக உருவாகின்றன.

மற்றொரு திட்டத்தில் மேலும் 350 வீடுகள் நிர்மாணிக்கப்படுகின்றன. மேலும் சில தனியார் வீடு மேம்பாடுகள் சிறிய அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

புதிய இந்து ஆலயம் நிர்மாணிப்பு

காம்பீரில் கம்பீரமாக எழுந்தருளியிருக்கும் தேவிஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம்

காம்பீர் தொகுதி இந்தியர்கள் குறைவான எண்ணிக்கையில் இருக்கின்ற காரணத்தால் அங்கு முறையான இந்து வழிபாட்டுத் தலம் ஒன்று இல்லாத குறை நீண்ட காலமாக இங்கே உள்ள இந்தியர்களிடையே இருந்து வந்தது. அதையும் நிறைவேற்றி இருக்கிறார் அசோஜன்.

அரசாங்க நிலம் எதுவும் ஆலயத்திற்கென ஒதுக்கப்படாத பட்சத்தில், டத்தோ சாய் மிங் குயி என்ற ஒரு சீன வணிகர் தனது சொந்த நிலத்திலிருந்து 20,000 சதுர அடி நிலத்தை வழங்க, கட்டுமானப் பணிகளுக்கான வடிவமைப்பு செலவினங்களை 2 இலட்சம் ரிங்கிட்டில் அசோஜனே ஏற்றுக் கொள்ள –

இதோ சகல வசதிகளுடன் கூடிய அழகான ஆலயமாக கம்பீரமாக எழுந்தருளியிருக்கிறது, ஸ்ரீ தேவி மகா மாரியம்மன் ஆலயம்.

1 டிசம்பர் 2017-இல் கும்பாபிஷேக விழாவில் டாக்டர் சுப்ரா மற்றும் மஇகா தலைவர்களுடன் அசோஜன்

ஜோகூர் மந்திரி பெசாரும் 2 இலட்சம் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டை இந்த ஆலயத்திற்கென வழங்க, மண்டபம் போன்ற வசதிகளுடன் 10 இலட்சம் ரிங்கிட் செலவில் கம்பீரமாக எழுந்தருளி, கடந்த 1 டிசம்பர் 2017-இல் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் அவர்களின் சிறப்பு வருகையோடு, கும்பாபிஷேகம் கண்டு காம்பீர் மக்களுக்கு பயன்பட்டு வருகிறது இந்த ஆலயம்.

நிரந்தர மொத்த வியாபார விவசாய சந்தை

காம்பீர் வட்டாரத்தில் விளையும் விவசாயப் பொருட்களையும்  அண்டை வட்டாரங்களில் விளையும் காய்கறிகள், பழங்கள் போன்ற விவசாய உற்பத்திப் பொருட்களையும் மொத்த வியாபாரமாக (whole sale) விற்பனை செய்யும் விவசாய சந்தை, ‘பாமா’ (FAMA) எனப்படும் மத்திய அரசாங்கத்தின் விவசாயப் பொருட்களுக்கான ஆணையத்தின் ஒத்துழைப்புடன் காம்பீரில் நிரந்தரமாக அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் உருவாக்கத்திலும் அசோஜனின் பங்களிப்பு கணிசமாக இருக்கின்றது.

இதன்மூலம், வட ஜோகூர் வட்டார விவசாய விளை பொருட்களைத் தினமும் காம்பீரில் விற்பனை செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டு, இதனால் உள்ளூர் மக்களும் பயனடைந்து வருகின்றனர்.

மீண்டும் போட்டியிடுவாரா?

இவ்வாறாக, பட்டியலிட்டுக் கொண்டே போகும் அளவுக்கு, பல மேம்பாட்டுத் திட்டங்களோடு, புக்கிட் காம்பீர் நகரை உருமாற்றியிருக்கிறார் அசோஜன்.

எல்லாம் சரி!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் மீண்டும் இங்கே போட்டியிடுவாரா?

இத்தனை மேம்பாடுகளைக் கொண்டு வந்தும், 2013-இல் 310 வாக்குகள் பெரும்பான்மையில் மட்டுமே வெல்ல முடிந்ததற்கான காரணங்கள் என்ன?

இந்தத் தொகுதியில் போட்டியிட்டு, மஇகா-தேசிய முன்னணி மீண்டும் வெல்ல முடியுமா?

தற்போதிருக்கும் அரசியல் சூழ்நிலைகள் – சவால்கள் என்ன?

விரிவாக விளக்கம் தரத் தயாரானார் அசோஜன்!

அவை அடுத்த கட்டுரையில்!

-செல்லியல் ஆசிரியர் குழு

அடுத்தது : தேர்தல்’14: காம்பீர்: “வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் வெற்றி பெறுவேன்!” – அசோஜன் (பாகம் 2)