Home நாடு ஹராப்பான் ஆட்சியில் மலேசியா, சீனாவிடம் கடன் வாங்காது: மகாதீர் உறுதி!

ஹராப்பான் ஆட்சியில் மலேசியா, சீனாவிடம் கடன் வாங்காது: மகாதீர் உறுதி!

809
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 14-வது பொதுத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வெற்றி பெற்றால், சீனாவில் இருந்து மலேசியா வாங்கும் கடன்கள் மற்றும் முதலீடுகளை மறு ஆய்வு செய்வதாக அக்கூட்டணியின் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது உறுதியளித்திருக்கிறார்.

இது குறித்து நேற்று புதன்கிழமை பேட்டி ஒன்றில் பேசிய மகாதீர், “சீனாவிடமிருந்து மலேசியா அதிக கடன்களைப் பெறுகின்றது. ஆனால் அதனைத் திரும்பச் செலுத்த முடியவில்லை” எனத் தெரிவித்திருக்கிறார்.

மேலும், சீனாவிடமிருந்து வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்த முடியாத இலங்கை, தமது ஹாம்பான்டோடா துறைமுகத்தை சீனாவிற்கு 99 ஆண்டுகளுக்கு உரிமை எழுதிக் கொடுத்திருப்பதையும் மகாதீர் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

 

 

“கடன் வாங்குவதை நிறுத்தவேண்டுமென நாங்கள் நினைக்கிறோம். அதேபோல், கடன் வாங்குவதில் உள்ள விதிமுறைகளை மறு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். திட்டங்களைப் பொறுத்தவரையில், தொடர்வதா? ஒத்தி வைப்பதா? அல்லது மறுபேச்சுவார்த்தை நடத்துவதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும்” என்று மகாதீர் கூறியிருக்கிறார்.

மலேசியாவில் சீனாவின் முதலீடு, பில்லியன் கணக்கில் இருப்பதை பக்காத்தான் ஹராப்பான் சுட்டிக் காட்டியிருக்கிறது.

55 பில்லியன் ரிங்கிட் இசிஆர்எல் (East Coast Rail Link) திட்டத்தில், சீனாவின் எக்சிம் வங்கி, 85 விழுக்காடு மென்கடனை அளித்திருக்கிறது என்றும் கூறியிருக்கிறது.

அதே போல், 12.5 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கோலா லிங்கி அனைத்துலகத் துறைமுகத் திட்டத்தில் சீனா பெரும்பங்கு முதலீடு செய்திருக்கிறது என்றும் கூறியிருக்கிறது.

அதேபோல், 33 உள்ளூர் தொழிற்சாலைகளில் 4.77 பில்லியன் ரிங்கிட்டும், மொத்த வளர்ச்சி மதிப்பில் 581.2 பில்லியன் ரிங்கிட் கொண்ட 22 சொத்து மேம்பாட்டு திட்டங்களிலும் சீனா முதலீடு செய்திருப்பதாகவும் பக்காத்தான் ஹராப்பான் கூறியிருக்கிறது.

 

 

எனினும், எதிர்கட்சியினரின் இக்குற்றச்சாட்டுகளை புத்ராஜெயா தொடர்ந்து மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.