Home தேர்தல்-14 தேர்தல்-14: கௌரவத்தையும், ஆட்சி மாற்றத்தையும் வலியுறுத்திய மகாதீர்!

தேர்தல்-14: கௌரவத்தையும், ஆட்சி மாற்றத்தையும் வலியுறுத்திய மகாதீர்!

840
0
SHARE
Ad
பொதுத் தேர்தலுக்கு முதல் நாள் லங்காவியில் உரையாற்றும் மகாதீர்

குவா (லங்காவி) – நேற்று செவ்வாய்க்கிழமை தனது இறுதிக் கட்டப் பிரச்சாரத்தை நேரலையாக லங்காவியில் இருந்து நிகழ்த்திய துன் மகாதீர், தனது உரையில் மக்களை ஈர்க்கும் பண ரீதியான அறிவிப்புகள் எதனையும் செய்யாது, வாக்காளர்கள் தங்களின் சுயகௌரவத்தை நிலைநாட்ட வேண்டும் என்பது குறித்தும், நாட்டை மீண்டும் சரியானப் பாதைக்குச் செலுத்த வேண்டும் என்பது குறித்தும் மட்டுமே வலியுறுத்தினார்.

அதே வேளையில் நாட்டின் நிர்வாகத்தை மோசமாக்கி விட்ட நஜிப் துன் ரசாக்கை பொதுத் தேர்தலில் தோற்கடித்தாக வேண்டும் என்றும் கூறினார்.

நாட்டில் எல்லாவற்றையும் பணத்தைக் கொண்டு வாங்கி விட முடியும் என நஜிப் நினைக்கிறார் என்றும் அவர் சாடினார்.

#TamilSchoolmychoice

தனது முதுமை குறித்தும் பேசிய மகாதீர், தனக்கு பதவி மோகமில்லை என்றும், மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்ட நாட்டை மீண்டும் சீர்திருத்த, பல குழுக்கள் தன்னை வந்து சந்தித்து வற்புறுத்தியதாலேயே இந்தப் போராட்டத்தை நாட்டு நலனுக்காக கையில் எடுத்ததாகக் கூறினார்.

மலேசிய இளைய சமுதாயத்தினருக்கும், பெண்களுக்கும் பக்காத்தான் ஆட்சியில் முக்கியத்துவம் வழங்கப்படும் என்பதையும் மகாதீர் குறிப்பிட்டார்.

“அவர்கள் கொடுக்கும் கொஞ்சம் பணத்துக்கு மயங்கி அவர்களுக்கு வாக்களிக்காதீர்கள். அதன் பிறகு அவர்களுக்கு நிரந்தரமாக நாம் அடிமையாகும் நிலைமை ஏற்படும்” என்றும் வாக்காளர்களுக்கு நினைவுபடுத்திய மகாதீர்,

நஜிப்பை மேலும் பிரதமராக நீடிக்க விட்டால், நாட்டின் பல பகுதிகளை வெளிநாட்டுக்கு விற்று விடுவார் என்றும், இப்போதே நாட்டின் பல பகுதிகள் வெளிநாட்டவருக்கு உரிமையாகி விட்டன என்றும் எச்சரித்தார்.

நாட்டைக் காப்பாற்ற, பக்காத்தானுக்கு வாய்ப்பு கொடுங்கள், திரண்டு வந்து வாக்களியுங்கள் என்ற அறைகூவலோடு தனது உரையை மகாதீர் நிறைவு செய்தார்.