கோலாலம்பூர் – தனது 93-வது வயதில் போட்டியிட்டு மலேசியாவின் 7-வது பிரதமராக ஆட்சியைப் பிடித்த சாதனையைப் புரிந்த துன் மகாதீர் இணைய மற்றும் சமூக உடகங்களிலும் எப்போதும் பொதுமக்களோடு தொடர்பு வைத்துக் கொண்டு வருபவர்.
அந்த வகையில் தனது இன்ஸ்டாகிராம் சமூக ஊடகத்தில் தீவிரமாகப் பங்கெடுத்து வரும் மகாதீர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுவரை 11 இலட்சம் பேரை பின்தொடர்பவர்களாகப் பெற்றிருக்கிறார்.
தனது சொந்த வலைத் தளம், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களை ‘செ டெட்’ (Che Det) என்ற பெயரில் மகாதீர் நடத்தி வருகிறார். மருத்துவராகவும், அரசியல்வாதியாகவும் தனது ஆரம்ப காலத்தில் தனது கருத்துகளை ‘செ டெட்’ என்ற பெயரிலேயே பதிவு செய்து வந்தார் மகாதீர்.
இன்றுவரை, அந்தப் பெயரிலேயே தனது சமூக ஊடகங்களை நடத்தி வருகிறார்.
பொதுத் தேர்தல் காலத்திலும் அவரது பிரச்சாரங்கள் டுவிட்டர், முகநூல் ஆகிய பக்கங்களின் மூலமாக இலட்சக்கணக்கானோரைச் சென்றடைந்தன. அவரது வெற்றிக்கும் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் வெற்றிக்கும் அவர்களின் இணைய ஊடகத் தொடர்புகளும் ஒரு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.