கோலாலம்பூர், மார்ச் 29 – பபகொமோ (Papagomo) என்ற அம்னோ கட்சி சார்ந்த வலைப் பதிவாளர் ஒரு போலி வாக்காளர் என்றும்,காவல்துறை மற்றும் குடிமக்கள் அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி இரு இடங்களில் வாக்களித்துள்ளார் என்றும், கடந்த வாரம் பி.கே.ஆர் கட்சியின் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி கூறியதைத் தொடர்ந்து, பபகொமோ என்ற வான் முகமத் அஸ்ரியின் பெயர் ஏற்கனவே காவல்துறையின் அஞ்சல் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதாக நேற்று காவல்துறை சார்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய காவல்துறையின் நிர்வாக இயக்குனர் மொர்டாட்ஸா நஸாரின் கூறுகையில், “வான் முகமத் அஸ்ரி மீது கடந்த 2005 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு அவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். அதன் பின்பு 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி அவர் மீதிருந்த குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் காவல்துறையிலிருந்து நீக்கப்பட்டபோதே அவர் அஞ்சல் வாக்காளர் என்ற தகுதியையும் இழந்து விட்டார் ” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ரபிஸி கூறிய மறுநாளே தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் உள்ள காவல்துறையின் அஞ்சல் வாக்காளர் பட்டியலில் இருந்து வான் முகமத் அஸ்ரியின் பெயரை நீக்கிவிட்டது, எனவே இனி அவர் காவல்துறையின் அஞ்சல் வாக்காளர் அல்ல என்று மொர்டாட்ஸா நஸாரின் உறுதிப்படுத்தினார்.