கோலாலம்பூர் – நஜிப் மீதான ஊழல் வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதியாகச் செயல்படும் முகமட் சோபியான் அப்துல் ரசாக் நீதிமன்ற நடைமுறைப்படி, வழக்குகளின் வரிசைகளுக்கேற்ப நியமிக்கப்ப்பட்டாரே தவிர, திட்டமிட்டுத் தேர்ந்தெடுக்கப்படவில்லை என கூட்டரசு நீதிமன்றம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
நீதிமன்றங்களில் வழக்குகள் இணையம் வழி பதிவு செய்யப்படும்போது வரிசைக் கிரமப்படி வழக்குகள் பதிவாகி, அதற்கேற்ப நீதிபதிகள் திட்டமிட்டு தேர்வு செய்யப்படாமல் தொடர்பின்றி (random) நியமிக்கப்படுகின்றனர் எனவும் கூட்டரசு நீதிமன்றப் பதிவாளர் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
நஜிப் துன் ரசாக் மீதான ஊழல் வழக்கை விசாரிக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி சோபியான் அப்துல் ரசாக் உடனடியாக அந்த வழக்கை மேற்கொண்டு விசாரிப்பதில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும் என மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் தலைவர் ஜோர்ஜ் வர்கீஸ் இன்று வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்றின்வழி கேட்டுக் கொண்டிருந்தார்.
பகாங் மாநிலத்தில் ஐந்து தவணைகள் சட்டமன்ற உறுப்பினராகவும், நான்கு தவணைகள் ஆட்சிக் குழு உறுப்பினராகவும் பணியாற்றியிருக்கும் அம்னோ சட்டமன்ற உறுப்பினர் முகமட் சோஃபி அப்துல் ரசாக்கின் இளைய சகோதரர் அந்த நீதிபதி என்பதால் அவர் இந்த வழக்கிலிருந்து விடுவித்துக் கொள்ள வேண்டும் என்றும் வர்கீஸ் மேலும் தெரிவித்திருந்தார்.