Home நாடு நஜிப் அனைத்துலகக் கடப்பிதழ் முடக்கம்

நஜிப் அனைத்துலகக் கடப்பிதழ் முடக்கம்

1002
0
SHARE
Ad

கோலாலம்பூர் – (பிற்பகல் 1.30 நிலவரம்) தன்மீது கொண்டுவரப்பட்ட 4 குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரியிருக்கும் நஜிப் துன் ரசாக் 1 மில்லியன் ரிங்கிட் பிணையில் (ஜாமீன்) விடுதலை செய்யப்பட்டார்.

அவருக்கு அவரது புதல்வரும், புதல்வியும் பிணை வழங்கினர்.

நஜிப் 4 குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்று மீதிலும் 1 மில்லியன் ரிங்கிட் பிணை செலுத்தப்பட வேண்டும் என அரசு தரப்பு கேட்டுக் கொண்டது. எனினும் நீதிபதி அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் சேர்த்து 1 மில்லியன் ரிங்கிட் பிணை என்பதை நிர்ணயித்தார்.

#TamilSchoolmychoice

நஜிப் பிணைக்காக இன்று 5 இலட்சம் ரிங்கிட் கட்ட வேண்டும் என்றும் மீதி 5 இலட்சம் ரிங்கிட் எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் (9 ஜூலை) செலுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

நஜிப் தனது இரண்டு அனைத்துலகக் கடப்பிதழ்களையும் (சொந்தக் கடப்பிதழ் மற்றும் முன்னாள் பிரதமர் என்ற முறையிலாக தூதரக அனுமதி பெற்ற (Diplomatic Passport) கடப்பிதழ்) நீதிமன்றம் வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கிடையில், இன்று நீதிமன்றத்தில் இந்த வழக்கு குறித்த விவரங்களை ஊடகங்களில் வழி வெளியிடுவதற்கு தடை செய்ய வேண்டும் என நஜிப் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸ், “உலகம் முழுவதும் 1எம்டிபி விவகாரங்கள் குறித்து பேசும்  வேளையில் நாம் மட்டும் பேசாமல் இருப்பது என்ன நியாயம்?” எனக் கேள்வி எழுப்பினார்.

எனினும் நீதிபதி வழக்கின் விவரங்கள் ஊடகங்களின் வழி வெளியிடுவதற்கு இடைக்காலத் தடை விதித்தார்.

பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசிய டோமி தோமஸ் 1எம்டிபி விவகாரங்கள் ஊடகங்களில் வெளியிடப்படக்கூடாது என்ற இடைக்காலத் தடையுத்தரவு அகற்றப்பட வேண்டும் என அரசு தரப்பு நீதிமன்றத்தில் ஒரு மாதத்திற்குள்ளாக விண்ணப்பம் செய்யும் என்றும் அறிவித்தார்.