கோலாலம்பூர் – 1எம்டிபி விவகாரம் தொடர்பிலான புலனாய்வில் ஈடுபட்டிருக்கும் 3 உயர் அரசு அதிகாரிகள் மீது நஜிப் துன் ரசாக் வழக்கு தொடுத்திருக்கிறார்.
தன்மீது மேற்கொள்ளப்பட்டிருக்கும் புலனாய்வுகளில் ஈடுபட்டிருக்கும் ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் சுக்ரி அப்துல், காவல் துறையின் வணிகக் குற்றப் பிரிவு இயக்குநர் அமார் சிங், அரசு தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸ் ஆகிய மூவரும் தன்மீது ஏற்கனவே தவறான கண்ணோட்டத்துடன் இந்தப் புலனாய்வுகளை மேற்கொண்டு வந்திருக்கின்றனர் என்ற கோணத்தில் நஜிப் இந்த வழக்கைத் தொடுத்திருக்கிறார். இவர்களின் கடந்த கால பத்திரிக்கை அறிக்கைகளின் அடிப்படையில் நஜிப் இந்த வழக்கைத் தொடுத்திருக்கிறார்.
இதன் காரணமாக தன்னுடன் முரண்பட்ட நலன்களைக் கொண்டுள்ள இந்த மூவரும் தொடர்ந்து இந்த புலனாய்வு விசாரணையில் ஈடுபட வேண்டுமா – தொடர்ந்து விசாரணைக் கையாள முடியுமா – என்பது குறித்து நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர் தனது வழக்கில் கேட்டுக் கொண்டுள்ளார்.
நஜிப்பின் இந்த வழக்கு கடந்த ஜூன் 30-ஆம் தேதி நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன என ராய்ட்டர் வெளியிட்ட செய்தி கூறுகின்றது.
அமார் சிங், நஜிப் தொடர்புடைய இல்லங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களைக் கைப்பற்றி அதற்குரிய மதிப்பையும் வெளியிட்டார்.
ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் முகமட் சுக்ரி அப்துல் 2015-ஆம் ஆண்டில் நஜிப்புக்கு எதிராக மேற்கொண்ட புலனாய்வின் காரணமாக அந்தப் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
டோமி தோமஸ் அரசு தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட விவகாரம் ஆரம்பம் முதலே சர்ச்சையாக இருந்து வருகிறது.