Home நாடு நஜிப் இல்ல ஆபரணங்கள் : 1 பில்லியன் ரிங்கிட்டைத் தாண்டும்!

நஜிப் இல்ல ஆபரணங்கள் : 1 பில்லியன் ரிங்கிட்டைத் தாண்டும்!

1996
0
SHARE
Ad

கோலாலம்பூர் – (நண்பகல் 12.00 மணி நிலவரம்)

இதுவரையில் நஜிப் துன் ரசாக் தொடர்புடைய இல்லங்களில் கைப்பற்றப்பட்ட ரொக்கம், ஆபரணங்களின் மதிப்பு 1 பில்லியனைத் தொட்டது என காவல் துறையின் வணிகக் குற்றங்களுக்கான பிரிவின் இயக்குநர் அமார் சிங் இன்று புதன்கிழமை காலை நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் அறிவித்துள்ளார்.

அவர் தெரிவித்த தகவல்கள் வருமாறு:

  • மே 16 மற்றும் மே 17 தேதிகளில் நஜிப் தொடர்புடைய 6 இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
  • அவற்றில் 2 இல்லங்கள் புத்ரா ஜெயாவிலும், 4 இல்லங்கள் கோலாலம்பூரிலும் இருந்தவையாகும்.
  • பெவிலியன் ஆடம்பரக் குடியிருப்பில் – பி-45 (B-45) என்ற எண் முகவரி கொண்டது – பெரிய பயணப் பெட்டிகள் 72 கைப்பற்றப்பட்டன.
  • மேலும் 284 பெட்டிகள் நிறைய ஆடம்பரக் கைப்பைகள் கைப்பற்றப்பட்டன.
  • இந்தப் பொருட்கள் கைப்பற்றப்பட்ட இடங்கள் அவற்றை மதிப்பிட பாதுகாப்பான இடங்கள் அல்ல என்பதால், அவை அனைத்தும் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுவரப்பட்டு, மே 21 முதல் மே 25 அவற்றை மதிப்பிடும் பணிகள் நடைபெற்றன.
  • இந்தப் பணிகளில் 150 காவல் துறை அதிகாரிகள், 8 சிறப்பு மதிப்பீட்டுக் குழுக்கள் செயலாற்றின.
  • ரொக்கமாகக் கைப்பற்றப்பட்ட பணம் 116.7 மில்லியன் ரிங்கிட்டாகும். இந்தப் பணம் 35 பெட்டிகளில் 26 பல்வகைப்பட்ட அந்நிய நாணயங்களின் மதிப்பில் இருந்தன.
  • இந்த ரொக்கப் பணத்தை எண்ணி முடிக்க 6 பணம் எண்ணும் இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன. 22 பேங்க் நெகாரா அதிகாரிகள் 3 நாட்கள் எடுத்துக் கொண்டு இந்தப் பணத்தை எண்ணி முடித்தனர்.
  • கைப்பற்றப்பட்ட 72 பெட்டிகளில் 25 பெட்டிகளில் விலையுயர்ந்த ஆபரணங்கள் இருந்தன. இவற்றின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரம் ஆகும்.
  • அவற்றில் 1,400 சங்கிலிகள், 2,200 மோதிரங்கள், 2,800 ஜோடி தோடுகள், 2,100 கைகளில் அணியும் சிறிய வகை சங்கிலிகள், ஆகியவை இருந்தன.
  • 16 இலட்சம் ரிங்கிட் மதிப்புடைய ஒரே ஒரு ஆடம்பரக் கைப்பையும் இந்த ஆபரணங்களில் அடங்கும்.
  • விலையுயர்ந்த நவரத்தினங்கள் பதித்த 14 தலைக் கிரீடங்களும் கைப்பற்றப்பட்ட ஆபரணங்களில் அடங்கும்.
  • 423 கைக்கெடிகாரங்கள் – 100 க்கும் மேற்பட்ட வணிக முத்திரைகளில் (பிராண்ட்) கைப்பற்றப்பட்டன. அவற்றின் மதிப்பு 78 மில்லியன் ரிங்கிட்.
  • 234 குளிர்க் கண்ணாடிகள் – பலதரப்பட்ட வணிக முத்திரைகளைக் கொண்டவை – அவற்றின் மதிப்பு 374 ஆயிரம் ரிங்கிட்
  • 1,600 புரூச் (Brooch) எனப்படும் ஆடைகளில் அலங்காரத்துக்காகப் பொருத்தப்படும் ஆபரணங்கள்.
  • கைப்பற்றப்பட்ட பொருட்களிலேயே அதிக விலை கொண்டது 6.4 மில்லியன் ரிங்கிட் மதிப்பு கொண்ட ஒரு தங்கச் சங்கிலியாகும்.
  • ஆபரணங்களின் உத்தேச மதிப்பு 440 மில்லியன் எனக் கணக்கிடப்படுகிறது. ஆனால் சந்தையில் இவற்றின் மதிப்பு மேலும் 50 விழுக்காடு அல்லது 100 விழுக்காடு அதிகமாக இருக்கலாம் என கணக்கிடப்படுகிறது.
  • 567 ஆடம்பரக் கைப்பைகள் கைப்பற்றப்பட்டன. 37 வெவ்வேறு வணிக முத்திரைகளை இவை கொண்டிருந்தன. இவற்றின் மதிப்பு 51.3 மில்லியன் ரிங்கிட் ஆகும்.
  • எனவே, ரொக்கம், ஆபரணங்கள் என கைப்பற்றப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு 900 மில்லியன் ரிங்கிட் முதல் 1.1 பில்லியன் ரிங்கிட் வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.