கோலாலம்பூர் – “பல்லாண்டு காலமாக இரத்தக் களரிப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் இலங்கைப் போரில் தோற்கடிக்கப்பட்டாலும் அவர்களின் சித்தாந்தம் உலகம் முழுக்க பரவி இருக்கின்றது என்பதோடு, அவர்களின் அனுதாபிகளும் இன்னும் உலகம் முழுக்க இருந்து வருகின்றனர். எனவே, அந்த இயக்கத்தின் சித்தாந்தமும், ஆதரவாளர்களும் இன்னும் எந்த ஒரு நாட்டுக்கும், குறிப்பாக மலேசியாவுக்கும் மிரட்டலாகவே இருந்து வருவர்” என மலேசியக் காவல் துறையின் முன்னாள் தலைவர் (ஐஜிபி) டான்ஸ்ரீ மூசா ஹசான் தெரிவித்தார்.
அண்மையில் பெர்னாமாவுக்கு வழங்கிய பிரத்தியேகப் பேட்டியில் மூசா ஹசான் இவ்வாறு கூறியிருக்கிறார்.
விடுதலைப் புலிகளின் ஈழவிடுதலைக்கான ஆயுதம் ஏந்தியப் போராட்டம் உலகம் முழுவதும் இருந்த தமிழர்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்றதோடு, இலங்கைத் தமிழர்கள் மீதான அனுதாபத்தையும் பெருக்கியது.
“விடுதலைப் புலிகள் இயக்கத்தை நாம் சாதாரணமாக எடைபோட்டு விடக்கூடாது. அமெரிக்காவும், ஐக்கிய நாட்டு மன்றமும் அவர்களைப் பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்துள்ளது என்பதோடு, மலேசியா உள்ளிட்ட 32 நாடுகளில் அந்த இயக்கம் தடை செய்யப்பட்டிருக்கிறது” என்றும் மூசா மேலும் தெரிவித்தார்.
மலேசியாவிலும், பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக உரையாற்றிய காரணத்தால் அவர் மீது காவல் துறையில் புகார்கள் செய்யப்பட்டன.
“2004-க்கும் 2005-க்கும் இடைப்பட்ட காலத்தில் மலேசிய விடுதலைப் புலிகளோடு தொடர்பு கொண்ட 6 மலேசியர்களை காவல் துறை கைது செய்தது. இவர்களில் வழக்கறிஞர், கணக்காய்வாளர் போன்ற நிபுணத்துவ துறைகளில் பணியாற்றியவர்களும் அடங்குவர். இந்தக் குழுவினர் நமது மக்களின் உதவியோடு நிதி திரட்டும் பணிகளில் ஈடுபட்டு வந்தனர் என இலங்கைக் காவல் துறையினர் எங்களுக்குத் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டியதாயிற்று” என்றும் மூசா தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
“விடுதலைப் புலிகளின் சித்தாந்தம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதுபோல் தெரிகிறது. கம்யூனிச சித்தாந்தம் போல இதுவும் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது. இதுபோன்ற சித்தாந்தங்கள் உடனடியாக மறைந்துவிடாது. எந்த ஒரு தீவிரவாத இயக்கமும் நமது நாட்டுக்கு மிரட்டல்தான். விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் இறந்து விட்டாலும், விடுதலைப் புலிகளின் தொடர்புப் பின்னல்கள் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கின்றன” என்றும் மூசா கூறியுள்ளார்.