Home நாடு இராமசாமிக்கு எதிரான புகார்கள் – புக்கிட் அமான் விசாரிக்கிறது

இராமசாமிக்கு எதிரான புகார்கள் – புக்கிட் அமான் விசாரிக்கிறது

1758
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமிக்கு எதிரான 53 காவல் துறை புகார்கள் தொடர்பில் அவரிடமிருந்து பினாங்கு காவல் துறை வாக்குமூலம் பெற்றுள்ள நிலையில், அந்த விசாரணையை புக்கிட் அமான் காவல்துறை தலைமையகம் நேரடியாகக் கையில் எடுத்துக் கொண்டுள்ளது.

இராமசாமியிடம் இருந்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதை பினாங்கு காவல் துறைத் தலைவர் டத்தோஸ்ரீ ஏ.தெய்வீகனும் உறுதிப்படுத்தியுள்ளார்.இராமசாமியைத் தவிர்த்து பினாங்கிலிருந்து மேலும் 10 நபர்களிடம் காவல் துறை வாக்குமூலம் பெற்றுள்ளதாகவும் தெய்வீகன் தெரிவித்திருக்கிறார்.

தடை செய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடனான தொடர்புகளைக் கொண்டிருந்தார் எனவும், அவரது மகன் திருமணத்திற்கு தமிழக அரசியல் தலைவரும், விடுதலைப் புலிகள் ஆதரவாளருமான வைகோ வருகை தந்திருப்பது தொடர்பிலும் இந்தக் காவல்துறைப் புகார்கள் இராமசாமிக்கு எதிராக செய்யப்பட்டிருந்தன. வைகோவுடன் இராமசாமி இருக்கும் புகைப்படங்கள் அவரது முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்ததைத் தொடர்ந்து இந்தப் புகார்கள் செய்யப்பட்டன.

#TamilSchoolmychoice

இராமசாமியும் காவல் துறையில் தனது சார்பாக புகார் ஒன்றை செய்திருக்கிறார்.

இதுகுறித்துக் கருத்துரைத்த காவல் துறைத் தலைவர் முகமட் புசி ஹருண் மலேசியக் குற்றவியல் சட்டம் 500-வது பிரிவு மற்றும் மலேசியத் தொடர்பு, பல்ஊடக சட்டம் பிரிவு 233 ஆகியவற்றின் கீழ் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.