மலாக்கா – (செல்லியல் ஊடகத்திற்கு அண்மையில் வழங்கிய சிறப்பு நேர்காணலில், அரசியல் களப்பணி ஆற்றிக் கொண்டிருந்த தான், மலாக்கா சட்டமன்ற உறுப்பினரானது எப்படி? மாநில ஆட்சிக் குழு உறுப்பினராகச் சந்திக்கும் சவால்கள், எதிர்காலத் திட்டங்கள் ஆகியவை குறித்து தொடர்ந்து பகிர்ந்து கொள்கிறார் காடெக் சட்டமன்ற உறுப்பினர் ஜி.சாமிநாதன்…)
சட்டமன்ற உறுப்பினராக….
அரசியல் களத்தில் சாதாரணத் தொண்டனாக வலம் வந்து கொண்டிருந்த தருணத்தில் திடீரென சட்டமன்றத்திற்குப் போட்டியிட முன்வந்தது எப்படி என்பது குறித்து கேட்கப்பட்டபோது, பின்வருமாறு விவரித்தார் சாமிநாதன்:
“மே 9 பொதுத் தேர்தலுக்கு சுமார் இரண்டு வாரங்கள் இருக்கும்போதுதான் பக்காத்தான் கூட்டணியின் இந்திய வேட்பாளரை காடெக் சட்டமன்றத்தில் நிறுத்துவது என்ற முடிவு எடுக்கப்பட்டது. கடந்த தவணையிலும் மஇகா-தேசிய முன்னணி வெற்றி பெற்ற தொகுதி என்பதால் பலரும் அங்கு போட்டியிட தயக்கம் காட்டியபோது, துணிந்து நான் போட்டியிடுகிறேன் என முன்வந்தேன்”
காடெக் தொகுதியில் ஜசெகவுக்கு எந்தவித கிளைகளோ, அரசியல் அடித்தளமோ இல்லை. எனினும் தனது கடந்த கால மக்கள் போராட்டங்களால் சாமிநாதனுக்கு அந்தத் தொகுதி வாக்காளர்களிடையே ஓரளவுக்கு அறிமுகம் இருந்தது. அதைவிட சாமிநாதனுக்கு அமைந்த இன்னொரு சாதகம் அவரது மனைவி காடெக் வட்டாரத்தைச் சேர்ந்தவராக இருந்தது. இதனால் அங்குள்ள இந்திய வாக்காளர்களிடையே அறிமுகப்படுத்திக் கொள்வதும், பிரச்சாரம் செய்வதும் சற்றே எளிதானது.
காடெக், அலோர் காஜா நாடாளுமன்றத்தின் கீழ் வரும் 5 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். கடந்த 2013 பொதுத் தேர்தலில் அலோர் காஜா நாடாளுமன்றத்தில் ஜசெக போட்டியிட்டது என்பதால் அந்த அனுபவத்தைக் கொண்டு ஜசெக கட்சியினரும் சாமிநாதனுக்குத் துணையாகக் களத்தில் இறங்கினர்.
இறுதியில் இந்தியர்களின் ஆதரவு, மலாய் வாக்குகள் தேசிய முன்னணி-அம்னோவுக்கு எதிராகத் தடம் புரண்டது, பக்காத்தான் கூட்டணிக்கு ஆதரவாக எழுந்த ஆட்சி மாற்ற அலை – என எல்லாம் ஒன்று சேர காடெக் தொகுதியில் 307 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார் சாமிநாதன்.
“மே 9 பொதுத் தேர்தலுக்கு முன்பாக ஏப்ரல் 19-ஆம் தேதிதான் நான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டேன். அந்த காலகட்டத்தில்தான் ஒருநாள் முன்பாக ஏப்ரல் 18-ஆம் தேதி எனக்கு முதல் குழந்தையும் பிறந்திருந்தது. பிரச்சாரத்தில் இறங்கும்போது ஒன்றை நான் முடிவு செய்துகொண்டேன். வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்கு என்னிடம் பணம் இல்லை. ஆனால், அவர்களைப் பார்த்துக் கைகுலுக்குவதற்கு என்னிடம் வலுவான கரங்கள் இருந்தன. எனவே, வாக்களிப்பு தினத்திற்குள் எவ்வளவு பேரைச் சந்திக்க முடியுமோ அந்த அளவுக்குச் சந்தித்து அவர்களுடன் கைகுலுக்க வேண்டும் என முடிவெடுத்தேன். அதே போல நிறைய வாக்காளர்களைச் சந்தித்துக் கைகொடுத்தேன். யாருக்கும் காசு கொடுக்கவில்லை. ஆனாலும் வெற்றி பெற்றேன்” என சிரித்துக் கொண்டே கூறுகிறார் சாமிநாதன்.
ஆட்சிக் குழு உறுப்பினராக….
ஆட்சிக் குழு உறுப்பினராக அவரது அனுபவங்கள் என்ன? – தனது பதவிக் காலத்தில் எதிர்நோக்கப்போகும் சவால்கள் என்ன? –
இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது “நான் அரசியலில் ஈடுபட்டபோது பல பக்காத்தான் கூட்டணி கூட்டங்களில் கலந்து கொள்வேன். அதில் எல்லா இனங்களையும் சேர்ந்தவர்களும் பங்கு பெறுவர். எனவே, மற்ற இன சகோதரர்களுடன் இணைந்து பணியாற்றுவது எனக்குப் பிரச்சனையோ, புதிதோ அல்ல. இப்போது கூட எங்களின் மாநில ஆட்சிக் குழுக்கூட்டங்கள் பக்காத்தான் கூட்டணிக் கூட்டத்தில் கலந்து கொள்வது போன்ற உணர்வையே ஏற்படுத்துகின்றன” என்கிறார் சாமிநாதன்.
கடந்த பல ஆண்டுகளாக இந்திய சமுதாயக் களத்தில் அடிமட்டத்தில் இறங்கி சமூக, அரசியல் பணியாற்றியிருப்பதால் மலாக்கா மாநில இந்தியர்களின் உணர்வுகளையும், பிரச்சனைகளையும் நன்கு உணர்ந்து புரிந்து கொண்டிருப்பதாகக்கூறும் சாமிநாதன், மாநில மந்திரி பெசார் அமானா கட்சியைச் சேர்ந்த அட்லி சஹாரியும் இந்தியர் விவகாரங்களில் மிகுந்த ஒத்துழைப்புடன் செயல்படுவதாகக் குறிப்பிடுகிறார்.
எனவே, அடுத்து வரும் ஆண்டுகளில் மலாக்கா மாநில மக்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துவேன் என்று கூறும் சாமிநாதன் “இந்திய சமுதாயத்தைப் பொறுத்தவரை அதன் இரு கண்கள் தமிழ்ப் பள்ளிகளும், ஆலயங்களும்! எனவே, மலாக்கா மாநில அனைத்து தலைமை ஆசிரியர்களையும் அழைத்து அவர்களோடு சந்திப்புக் கூட்டம் நடத்தி தமிழ்ப் பள்ளிகளின் பிரச்சனைகளைக் கண்டறிந்திருக்கிறேன். தமிழ்ப் பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் சங்கங்களில் இருப்பவர்கள், ஆலய நிர்வாகப் பொறுப்புகளிலும் இருப்பதை முடிந்தவரை தவிர்த்தால் நல்லது என அறிவுறுத்தியிருக்கிறேன். இதனால் பல பிரச்சனைகளைத் தவிர்க்க முடியும் என்பதை அனுபவபூர்வமாகக் கண்டிருக்கிறேன். எனவே, தமிழ்ப் பள்ளிகள், ஆலயங்கள் ஆகியவற்றை நோக்கியே எனது அரசியல் பணிகள் மையம் கொண்டிருக்கும். அதன் மூலம் பல மாற்றங்களைக் கொண்டு வர முடியும் என நம்புகின்றேன்” என்கிறார்.
சாமிநாதன் வகுத்திருக்கும் சில எதிர்காலத் திட்டங்களில் ஒன்றுதான் நாம் முந்தைய கட்டுரையில் குறிப்பிட்ட மலாக்கா வாழ் இந்துக்களுக்கென பிரத்தியேகமாக நிர்மாணிக்கப்படவிருக்கும் அஸ்தி கரைக்கும் இறுதிச் சடங்குகளுக்கான மையம். “கடலை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கும் பிரம்மாண்டமான சிவன் சிலையோடு அந்த மையத்தைக் கட்டுவதற்காக இடம் பார்ப்பது போன்ற அடிப்படை வேலைகளில் ஈடுபட்டு வருகிறேன்” என்கிறார் சாமிநாதன் .
சாமிநாதனுடனான சந்திப்பை முடித்துக் கொண்டு எழுந்தபோது, ஒன்றைப் புரிந்து கொள்ள முடிந்தது. இந்த நேர்காணல் கட்டுரைகளின் தொடக்கத்தில் கூறியபடி, 14-வது பொதுத் தேர்தல் நம்மிடையே சில புதிய, வித்தியாசமான அரசியல் தலைமைகளை முன்கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.
சாமிநாதனிடம் அலங்கார வார்த்தைகளின் அணிவகுப்பில்லை. ஆடம்பர அணுகுமுறைகள் இல்லை. ஆட்சி அதிகார அனுபவம் இல்லை.
ஆனால், கடந்த பல ஆண்டுகளாக போராட்டக் களத்தில் ஒரு போராளியாக, சாதாரணத் தொண்டனாக நின்ற காரணத்தால் – அந்த அனுபவத்தால் – இந்திய சமுதாயம் குறித்த பிரச்சனைகள் என்ன, அதை அணுகுவது எப்படி – தீர்வு காண்பது எப்படி – என்பதற்கான தெளிவான கண்ணோட்டம் சாமிநாதன் போன்றவர்களிடம் காணப்படுகிறது. அதே வேளையில் எதையும் சமரசம் செய்து கொள்ளாத, விட்டுக் கொடுக்காத, ஏன் முடியாது எனக் கேள்வி கேட்கும் போராட்ட குணமும் நிறையவே அவரிடம் குவிந்திருக்கிறது.
இவற்றையெல்லாம் கொண்டு பார்க்கும்போது – நேர்காணலில் அவர் கூறியது போல் – மலாக்கா வாழ் இந்தியர்களிடையே மாற்றத்தைக் கொண்டு வருவேன் – என்ற அவரது முழக்கத்தை செயல்படுத்திக் காட்டுவார் என்ற நம்பிக்கையும் பிறக்கிறது.