Home நாடு “மலாக்கா கடலை நோக்கிப் பார்க்கும் பிரம்மாண்ட சிவன் சிலை” – சாமிநாதனின் கனவு

“மலாக்கா கடலை நோக்கிப் பார்க்கும் பிரம்மாண்ட சிவன் சிலை” – சாமிநாதனின் கனவு

2339
0
SHARE
Ad

மலாக்கா – “மலாக்கா ஆட்சிக் குழு உறுப்பினராகப் பொறுப்பேற்றுக் கொண்டவுடன் எனது முதல் பணியாக, கடமையாக – மலாக்கா வாழ் இந்துக்களுக்காக இறுதிச் சடங்குகள் செய்வதற்கான மையம் ஒன்றை நிர்மாணிக்க வேண்டும் என்பதில் முழுக் கவனம் செலுத்தி வருகிறேன். தற்போது இதற்கென ஒரு முறையான இடம் இல்லை. ஆங்காங்கே தங்கள் இஷ்டப்படி கடலோரங்களில் நமது இந்துப் பெருமக்கள் மறைந்த தங்களின் குடும்பத்தாரின் அஸ்தியைக் கரைக்கும் இறுதிச் சடங்குகளை செய்து வருகின்றனர். மலாக்கா கடலை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கும் வண்ணம் ஒரு பிரம்மாண்டமான சிவபெருமான் சிலையோடு, இதற்கென பிரத்தியேக இறுதிச் சடங்குகளுக்கான மையம் ஒன்றை நிர்மாணிக்க வேண்டும். மலாக்கா மந்திரி பெசாரும் அதற்கான இடத்தைப் பார்க்கச் சொல்லி விட்டார். அதற்காக இடம் பார்ப்பதில் நான் தீவிரமாக இருக்கிறேன்” எனக் கூறுகிறார் மலாக்கா மாநில ஆட்சிக் குழு உறுப்பினரும் காடெக் மஇகா சட்டமன்ற உறுப்பினருமான ஜி.சாமிநாதன்.

அரசியலில் பிரவேசித்தது எப்படி?

அண்மையில் செல்லியல் ஊடகத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் தனது அரசியல் பிரவேசம், சட்டமன்ற உறுப்பினராகவும், ஆட்சிக் குழு உறுப்பினராகவும் சந்தித்து வரும் சவால்கள், அனுபவங்கள், எதிர்காலத்தில் மலாக்கா மாநில இந்தியர்களுக்காக கொண்டுவர எண்ணம் கொண்டிருக்கும் திட்டங்கள் ஆகியவை குறித்து விரிவாகப் பேசியபோதுதான் சாமிநாதன் தனது மேற்கண்ட கனவுத் திட்டத்தையும் வெளியிட்டார்.

மலேசியாவைப் புரட்டிப் போட்ட 14-வது பொதுத் தேர்தல் சில புதிய அரசியல் முகங்களையும் அடையாளம் காட்டி, வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது. அவர்களில் ஒருவர்தான் ஜி.சாமிநாதன். ஜசெக சார்பில், பக்காத்தான் கூட்டணி வேட்பாளராக காடெக் சட்டமன்றத் தொகுதியில் களமிறங்கிய சாமிநாதன், மஇகா-தேசிய முன்னணி வேட்பாளராகப் போட்டியிட்ட பன்னீர் செல்வத்தை 307 வாக்குகளில் தோற்கடித்தார்.

2018 பொதுத் தேர்தல் – காடெக் சட்டமன்ற முடிவுகள்
#TamilSchoolmychoice

எதிர்பாராதவிதமாக, மலாக்கா மாநிலத்தை பக்காத்தான் கூட்டணி கைப்பற்ற, ஒரே இந்திய சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றிருந்த சாமிநாதனும் ஆட்சிக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

எப்படி அரசியல் களத்துக்குள் காலடி எடுத்து வைத்தீர்கள் என்ற கேள்விக்கு, தனது பின்புலத்தை விவரிக்கத் தொடங்கினார் சாமிநாதன். “டுரியான் துங்கல் வட்டாரத்தைச் சேர்ந்த பெர்த்தாம் தோட்டத்தைச் சேர்ந்தவன் நான். சிறுவயது முதலே ஆலயம் தொடர்பான விவகாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வந்தேன். எங்கள் வட்டாரத்தில் உள்ள முருகன் ஆலயத்தின் பணிகளில் நான் ஈடுபட்டபோது, அனைத்துப் பிரச்சனைகளும் இறுதி முடிவுக்கு அரசியல்வாதிகளிடம் கொண்டு செல்லப்படுவதைப் பார்த்தேன். அப்போதுதான் நேரடி அரசியலில் ஈடுபட முடிவெடுத்தேன். அதற்கு முன்பாக டுரியான் துங்கல் மணிமன்றத்தில் ஈடுபாடு கொண்டு செயல்பட்டேன்” என்கிறார் சாமிநாதன்.

ஜசெகவில் சேர்ந்தது ஏன்?

சரி, ஏன் ஜசெகவை உங்களின் அரசியல் தளமாகத் தேர்ந்தெடுத்தீர்கள் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டபோது, சாமிநாதன் பின்வருமாறு கூறுகிறார்:

“ஏனோ தெரியவில்லை. இந்திய சமுதாயம் எதிர்நோக்கி வரும் பின்னடைவுகளுக்கும், பிரச்சனைகளுக்கும், தேசிய முன்னணி அரசாங்கம்தான் காரணம் என்பது ஆரம்பம் முதல் மனதில் ஆழப் பதிந்து விட்டது. எனவே எந்த ஒரு தேசிய முன்னணி கட்சியிலும் சேரக் கூடாது என முடிவெடுத்திருந்தேன். அதே வேளையில் ஜசெக சார்பில் கர்ப்பால் சிங், குலசேகரன் போன்றவர்கள் முன்னெடுத்து நடத்தி வந்த போராட்டங்கள்  என்னைக் கவர்ந்தன. அதனால் ஜசெக மீது ஒரு அபிமானம் இருந்தது. இந்த நேரத்தில்தான் 2007 ஹிண்ட்ராப் போராட்டங்கள் என்னை சமூகத்துக்கான போராட்டக் களத்துக்குக் கொண்டு சென்றது. அதைத் தொடர்ந்து பல கட்சிகளும், என்னை அவர்கள் கட்சியில் சேருமாறு அழைத்தனர். ஜசெகவில் சேருவது என்பது நானே எடுத்த முடிவு. 2012-இல் ஜசெகவில் என்னை இணைத்துக் கொண்டேன்”   ,

அதைத் தொடர்ந்து ஜசெகவிலும், ஜசெக அங்கம் வகித்த பக்காத்தான் கூட்டணியிலும் சில பொறுப்புகளை ஏற்று செயல்பட்டு வந்தார் சாமிநாதன்.

சாதாரண, ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த சாமிநாதன் லாரி போக்குவரத்துத் தொழிலை சொந்தமாக நடத்தி வந்தார். வேலைக்குச் செல்லும் இடத்தில் எல்லாம் அந்த லாரி நிறுவனத்தின் முதலாளி தான் என்ற உண்மையைக் கூறிக் கொள்ளாமல், நான் வெறும் லாரி ஓட்டுநர்தான் எனக் கூறிக் கொள்வாராம் சாமிநாதன். அந்த சிக்கலான வாழ்க்கைப் போராட்டத்திலும், மக்கள் போராட்டம் என்று வந்து விட்டால், தனது சொந்த வருமானத்தை மறந்து விட்டு, மக்கள் போராட்டத்திற்காக சென்றுவிடும் குணம் சாமிநாதனுக்கு இருந்தது. இதனால் தனது பெற்றோர்களும் தன்மீது வருத்தம் அடைந்தனர் என சிரித்துக் கொண்டே கூறுகிறார் சாமிநாதன்.

-இரா.முத்தரசன்

அடுத்து: சாமிநாதன் நேர்காணலின் பாகம் -2

– சட்டமன்ற உறுப்பினரானது எப்படி?

– ஆட்சிக் குழு உறுப்பினராக அனுபவங்கள் என்ன? மலாக்கா இந்தியர்களுக்கான திட்டங்கள் என்ன?

-செல்லியல் நேர்காணலில் தொடர்ந்து விவரிக்கிறார் சாமிநாதன்

தொடர்புடைய முந்தைய கட்டுரை:

“மலாக்கா இந்தியர்களிடையே மாற்றம் ஏற்படுத்துவேன்” – ஆட்சிக் குழு உறுப்பினர் சாமிநாதன் (காணொளியுடன்)