Home நாடு சுங்கை காண்டிஸ்: மும்முனைப் போட்டிக்குத் தயாராகிறது

சுங்கை காண்டிஸ்: மும்முனைப் போட்டிக்குத் தயாராகிறது

1230
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 14-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஆளும் நம்பிக்கைக் கூட்டணியின் செல்வாக்குக்கு முதல் சவாலாகத் திகழப்போகும் சிலாங்கூர் மாநிலத்தின் சுங்கை காண்டிஸ் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று சனிக்கிழமை காலை நடைபெற்று முடிந்தது.

அம்னோ உச்சமன்ற உறுப்பினர் லோக்மான் நூர் அடாம் அம்னோ-தேசிய முன்னணி வேட்பாளராகப் போட்டியிட வேட்புமனுவைத் தாக்கல் செய்ய, பிகேஆர் கட்சி சார்பாகப் போட்டியிட முகமட் சவாவி அகமட் முக்னி வேட்புமனுத் தாக்கல் செய்தார். இவர் தாபிஸ் அல் பாத்தே ஜாலான் கெபுன் எனப்படும் இஸ்லாமிய மதப் பள்ளியின் தலைமையாசிரியர் ஆவார்.

#TamilSchoolmychoice

மூன்றாவது வேட்பாளராக கே.மூர்த்தி என்பவர் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார்.

பிகேஆர் கட்சியின் சுங்கை காண்டிஸ் சட்டமன்ற உறுப்பினர் மாட் சுகைமி ஷாபி (வயது 50) கடந்த ஜூலை 2-ஆம் தேதி உடல் நலக் குறைவால் எதிர்பாராதவிதமாக காலமானதைத் தொடர்ந்து இந்த இடைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

அவரது மறைவைத் தொடர்ந்து மே 9 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நடைபெறும் முதல் இடைத் தேர்தலாக சுங்கை காண்டிஸ் சட்டமன்றத்துக்கான இடைத் தேர்தல் அமையவிருக்கிறது.

கோத்தா ராஜா நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் இந்த சுங்கை காண்டிஸ் சட்டமன்றம் அமைந்திருக்கிறது.எதிர்வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதி வாக்களிப்பு நடைபெறும்.

சுங்கை காண்டிஸ் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என பாஸ் கட்சி அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பக்காத்தான் மற்றும் தேசிய முன்னணி ஆகிய இரு கூட்டணிகளுக்கு இடையிலான நேரடி மோதலாக இந்த சட்டமன்ற இடைத் தேர்தல் அமையும்.