Home நாடு சுங்கை காண்டிஸ் : பிகேஆர் வேட்பாளர் முகமட் சவாவி அகமட் முக்னி

சுங்கை காண்டிஸ் : பிகேஆர் வேட்பாளர் முகமட் சவாவி அகமட் முக்னி

983
0
SHARE
Ad

ஷா ஆலாம் — எதிர்வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் சுங்கை காண்டிஸ் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் பிகேஆர் கட்சி சார்பாகப் போட்டியிட முகமட் சவாவி அகமட் முக்னி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் தாபிஸ் அல் பாத்தே ஜாலான் கெபுன் எனப்படும் இஸ்லாமிய மதப் பள்ளியின் தலைமையாசிரியர் ஆவார்.

சுங்கை காண்டிஸ் வட்டாரத்திலுள்ள கம்போங் ஜாலான் கெபுன் பகுதியில் உள்ள பொது வெளித் திடலில் சுங்கை காண்டிஸ் இடைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை நேற்று (ஜூலை 19) தொடக்கி வைத்து உரையாற்றியபோது துணைப் பிரதமரும் பிகேஆர் கட்சித் தலைவியுமான வான் அசிசா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

“உங்களில் பலர் சுங்கை காண்டிஸ் வேட்பாளர்களாக ஆவதற்கு தகுதி இருக்கிறது. உங்களால் இந்தத் தொகுதியை வெல்லவும் முடியும். ஆனால் ஒரே ஒருவர்தான் வேட்பாளராக முடியும். நாம் எப்படியும் சுங்கை காண்டிஸ் சட்டமன்றத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். எனவே வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்படாவிட்டாலும் நீங்கள் அனைவரும் பிகேஆர் வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க வேண்டும்” எனவும் வான் அசிசா கேட்டுக் கொண்டார்.

#TamilSchoolmychoice

47 வயதான முகமட் சவாவி பிகேஆர் கட்சியின் மதப் பிரிவு குழுவுக்கான செயலாளரும் ஆவார்.

பிகேஆர் கட்சியின் சுங்கை காண்டிஸ் சட்டமன்ற உறுப்பினர் மாட் சுகைமி ஷாபி (வயது 50) கடந்த ஜூலை 2-ஆம் தேதி உடல் நலக் குறைவால் எதிர்பாராதவிதமாக காலமானதைத் தொடர்ந்து இந்த இடைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

அவரது மறைவைத் தொடர்ந்து மே 9 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நடைபெறும் முதல் இடைத் தேர்தலாக சுங்கை காண்டிஸ் சட்டமன்றத்துக்கான இடைத் தேர்தல் அமையவிருக்கிறது.

கோத்தா ராஜா நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் இந்த சுங்கை காண்டிஸ் சட்டமன்றம் அமைந்திருக்கிறது.