Home நாடு வேதமூர்த்தி தலைமையில் 300 பேர் கல்வி குறித்த விவாதம்

வேதமூர்த்தி தலைமையில் 300 பேர் கல்வி குறித்த விவாதம்

2180
0
SHARE
Ad
கல்விக் கருத்தரங்கைத் தொடக்கி வைத்து வேதமூர்த்தி உரையாற்றுகிறார்

கோலாலம்பூர் – “கல்வியில் மலேசிய இந்தியர்களின் எதிர்காலம் : வாய்ப்புகளும் சவால்களும்” என்ற கருப்பொருளோடு நேற்று சனிக்கிழமை பிரதமர் துறை அமைச்சர் பொ.வேதமூர்த்தி நடைபெற்ற அரை நாள் கருத்தரங்கில் கல்வித் துறையில் தொடர்புடைய சுமார் 300 பேராளர்கள் திரண்டு வந்து தங்களின் பல்வேறு கருத்துகளையும், இந்தியர்களுக்கான கல்வித் துறை எதிர்காலத்தில் எதிர்நோக்கப் போக்கும் சவால்களையும், அதற்கான தீர்வுகளையும் வழங்கினர்.

காலைச் சிற்றுண்டியோடு தொடங்கிய கருத்தரங்கைத் தொடக்கி வைத்து உரையாற்றிய பொ.வேதமூர்த்தி தாங்கள் வட்டமேசை போன்ற விவாதம் நடத்தத் திட்டமிட்டதாகவும், அதற்காக சுமார் 80 பேர் வருவார்கள் என எதிர்பார்த்ததாகவும், ஆனால் 300 பேர் திரண்டு வந்தது, மக்களின் எதிர்பார்ப்புகளைக் காட்டுவதாகவும், தங்களின் மேல் அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையைக் காட்டுவதாகவும் குறிப்பிட்டார்.

திரளான பேராளர்கள்

வேதமூர்த்தி உரை

“கடந்த காலங்களைப் போல் அல்லாது மக்களின் கருத்துகள் முதலில் அறியப்பட்டு அதன்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தக் கருத்தரங்கை நடத்துகிறோம். இது கல்வி தொடர்பானது மட்டும்தான். மற்ற மற்ற அம்சங்களில், கருப்பொருளில் இத்தகைய கருத்தரங்கங்கள் தொடர்ந்து நடத்தப்படும். மேலும், இதே போன்ற கருத்தரங்கங்கள் மற்ற மாநிலங்களிலும், அந்த வட்டார மக்களின் கருத்துகளைக் கேட்டறிய நடத்தப்படும்” என்றும் வேதமூர்த்தி தனது உரையில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“பலர் என்னிடம் வந்து தாங்கள் முன்மொழிந்த நல்ல பரிந்துரைகளை முன்பிருந்த செடிக் தலைமைத்துவம் செயல்படுத்த வாய்ப்பு தரவில்லை எனக் கூறினர். வேறு சிலரோ என்னிடம் தொடர்பு கொண்டு கல்வி தொடர்பான விவகாரங்களை எப்படிச் செய்யலாம் என ஆலோசனை வழங்க முற்பட்டார்கள். எனவேதான் அனைவரையும் ஒன்று திரட்டி இதுபோன்ற கருத்தரங்கை நடத்தி அவர்களின் கருத்துகளையும், ஆலோசனைகளையும் ஒருமுகப்படுத்த முனைந்தோம்” என அவர் மேலும் கூறினார்.

வேதமூர்த்தியின் உரையைத் தொடர்ந்து, பேராளர்கள் குழுவாகவோ, தனிநபராகவோ தங்களின் கருத்துகளை எழுதி வழங்க வாய்ப்பு வழங்கப்பட்டது. பிரச்சனைகள், சவால்கள், எதிர்நோக்கும் அபாயங்கள், தீர்வுகள் போன்ற தலைப்புகளில் பேராளர்கள் தங்களின் கருத்துகளை அந்தந்தப் பிரிவுக்கான வண்ணத் தாட்களில் எழுதி அதற்கென பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருந்த பிரிவுகளில் ஒட்டி வைத்தனர்.இதன் மூலம் பெறப்படும் கருத்துகள், ஆலோசனைகள் அனைத்தும் ஒருமுகப்படுத்தப்பட்டு அவை பேராளர்களுக்குத் தெரியப்படுத்தப்படும் என்பதோடு, செடிக்கின் அடுத்த கட்ட செயல்பாடுகளுக்கான வழிகாட்டியாகவும் கொள்ளப்படும் என இந்தக் கருத்தரங்களை வழிநடத்திய டாக்டர் தர்மராஜா தெரிவித்தார்.

பேராளர்களின் பங்கேற்பு

அதைத் தொடர்ந்து பேராளர்கள் கல்வி தொடர்பான கேள்விகளை முன்வைக்க வாய்ப்புகள் வழங்கப்பட்டன. அனைத்து கேள்விகளுக்கும் வேதமூர்த்தி பதிலளித்தார். செடிக்கின் செயல்பாடுகள், பள்ளிகளில் சமயக் கல்வி, தமிழ்ப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறையும் பிரச்சனைகள் என பல்முனைகளில் இந்தியர் கல்வி தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு வேதமூர்த்தி பதிலளித்ததோடு, அந்த விவகாரங்கள் குறித்த தனது கருத்துகளையும் விளக்கினார்.

சில பேராளர்கள் தாங்கள் கொண்டுள்ள ஆற்றல்களை எடுத்துரைத்ததோடு, இந்தியர் கல்வி மேம்பாட்டுக்காகத் தங்களின் பங்களிப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும், தங்களைப் பயன்படுத்திக் கொள்ளும்படியும் கேட்டுக் கொண்டனர்.

பின்னர் தனது நிறைவுரையில்,  இனி இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் எந்தத் துறையில் தங்களின் பங்களிப்பை வழங்க ஆர்வம் கொள்கிறார்களோ அதைப் பொறுத்து சிறு சிறு விவாதக் குழுக்கள் உருவாக்கப்படும் என்றும் அவர் கூறினார். அதைத் தொடர்ந்து பல்வேறு பேராளர்கள் தங்களின் விருப்பத் துறைகளை வழங்கப்பட்ட படிவங்களில் எழுத்து மூலம் வழங்கினர்.

செடிக் அமைப்பின் எதிர்கால செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பது குறித்த ஒரு கண்ணோட்டத்தைக் காட்டும் விதமாகவும், இந்தியர்களின் பிரச்சனைகளுக்காக எப்போதும் ஹிண்ட்ராப் இயக்கத்தின் வழி போராடி வந்திருக்கும் வேதமூர்த்தி இனி அமைச்சர் பொறுப்பிலிருந்து எவ்வாறு செயல்படப் போகிறார் என்பதற்கான ஒரு சிறிய சான்றாகவும், அதேவேளையில் எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தியர்களின் கல்வி என்ற விவகாரத்தில் இந்திய சமுதாயத்தின் தலைவர்கள், இயக்கப் பிரதிநிதிகள், கல்விமான்கள் எவ்வளவு அக்கறை கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகவும், நேற்றைய ““கல்வியில் மலேசிய இந்தியர்களின் எதிர்காலம் : வாய்ப்புகளும் சவால்களும்” என்ற கருத்தரங்கம் இனிதே நடந்து முடிந்திருக்கிறது – நிறைய எதிர்பார்ப்புகளுடன்!

-இரா.முத்தரசன்