புத்ரா ஜெயா – நிதியமைச்சர் லிம் குவான் எங்கின் அரசியல் செயலாளராக டாமன்சாரா நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா (படம்) நேற்று புதன்கிழமை முதல் நியமிக்கப்பட்டார். ஏற்கனவே, டோனி புவா நிதியமைச்சரின் சிறப்பு ஆலோசகராக, சம்பளம் ஏதுமின்றி செயல்பட்டு வந்தார்.
டோனி புவா உள்ளிட்ட 23 அரசியல் செயலாளர்கள் பிரதமர் துன் மகாதீர் முன்னிலையில் பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் புதிய அரசாங்கத் தலைமைச் செயலாளர் இஸ்மாயில் பக்காரும் கலந்து கொண்டார்.
பொதுவாக ஒவ்வொரு அமைச்சருக்கும் ஓர் அரசியல் செயலாளர் நியமிக்கப்படுவார். பிரதமர், துணைப் பிரதமர் போன்றவர்களுக்கு மட்டும் கூடுதலாக சில அரசியல் செயலாளர்கள் நியமிக்கப்படுவர்.
அந்த வகையில் நேற்று மொத்தம் 23 அரசியல் செயலாளர்கள் பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.