பீடோர்/இலண்டன் – இன்று சனிக்கிழமை இலண்டன் மாநகரில் செயல்பட்டு வரும் திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளியும், பீடோரில் இயங்கிவரும் துன் சம்பந்தன் தமிழ்ப் பள்ளியும், இணையம் வழி கல்விப் பரிமாற்றம் செய்துகொள்ளும் புதிய அத்தியாயம் தொடங்கியது.
இந்தத் தொடக்க நிகழ்ச்சி பீடோர் துன் சம்பந்தன் தமிழ்ப் பள்ளி வளாகத்தில் மாலை 5.00 மணிக்கு நடைபெற்ற வேளையில் அதே நேரத்தில் உலகின் இன்னொரு மூலையில் இருக்கும் இலண்டன் நகரிலுள்ள திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியின் வளாகத்தில் இலண்டன் நேரப்படி காலை 10.00 மணிக்கு இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழா ஒரே நேரத்தில் நடைபெற்றது.
இதன் மூலம் மலேசியாவுக்கு வெளியே உலகின் இன்னொரு நாட்டில் அமைந்துள்ள பள்ளி ஒன்றுடன் கல்விப் பரிமாற்றத்தில் ஈடுபடும் முதல் தமிழ்ப் பள்ளி என்ற பெருமையையும், சாதனையையும் பீடோர் துன் சம்பந்தன் தமிழ்ப் பள்ளி நிகழ்த்தியிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் பேராக் மாநில தமிழ்ப் பள்ளிகளின் அமைப்பாளர் சுப.நற்குணன், மலேசியாவின் கணினி நிபுணர் முத்து நெடுமாறன் ஆகியோர் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.