Home நாடு சுவாமி இராமாஜி நாடாளுமன்றத்தில் நுழையத் தடை

சுவாமி இராமாஜி நாடாளுமன்றத்தில் நுழையத் தடை

1411
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இந்து சமய விவகாரங்கள் குறித்த போராட்டங்களை எப்போதும் முன்னெடுத்து வந்திருப்பவரும், சீ பீல்ட் மகா மாரியம்மன் ஆலய நடவடிக்கைக் குழுவின் தலைவருமான சுவாமி இராமாஜி இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நுழைவதற்கு அந்த நுழைவாயிலில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதி மறுத்தனர்.

இந்து சுவாமிஜிகளுக்கு உரிய ஆடைகளை அவர் அணிந்திருந்ததுதான் அவர் நாடாளுமன்றத்தில் நுழைவதற்கு விதிக்கப்பட்டதற்கான தடைக்குக் காரணம் எனவும் அவரிடம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இன்று வியாழக்கிழமை மாலை 6.00 மணிக்கு தன்னை நாடாளுமன்றத்தில் வந்து சந்திக்கும்படி பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தங்களிடம் கூறியிருந்ததாகவும், அதன்படி தானும், நான்கு பேர் கொண்ட தனது குழுவினரும் நாடாளுமன்றத்திற்கு சென்றதாகவும் சுவாமி இராமாஜி தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து உடனே வேதமூர்த்தியை தொடர்பு கொண்டதாகவும் இராமாஜி தெரிவித்தார். எனினும் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றாலும், பின்னர் வேதமூர்த்தியின் செயலாளர்களில் ஒருவர் வெளியில் வந்து நாடாளுமன்ற நுழைவாயில் பாதுகாப்பு அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்திய பின்னரும் இராமாஜிக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் இந்துப் போராட்டவாதிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து இன்று வேதமூர்த்தி சந்திப்புக் கூட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்ததாகவும் இராமாஜி கூறினார்.

சீ பீல்ட் ஆலய விவகாரத்தில் பிரதமர் துன் மகாதீர் தலையிட வேண்டும் என கோரிக்கை விடுக்கும் மனு ஒன்றை சமர்ப்பிக்கும் நோக்கில் நேற்று புதன்கிழமை நாடாளுமன்றத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து இன்று வேதமூர்த்தியைச் சந்திக்க சென்றபோதுதான் இராமாஜிக்கு அவரது ஆடையைக் காரணம் காட்டி அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

இதன் தொடர்பில் செல்லியலுக்கு அனுப்பிய செய்தி ஒன்றில் இராமாஜி இந்த விவரங்களை வெளியிட்டார்.

வேதமூர்த்தியுடனான சந்திப்பு ஓர் உணவகம் அல்லது தங்கும் விடுதி போன்ற மாற்று இடம் ஒன்றில் நடத்தப்பட தன்னிடம் ஆலோசனை வழங்கப்பட்டதாகவும் எனினும் அதனை ஏற்றுக் கொள்ளாமல் தங்கள் குழுவினரை சீ பீல்ட் ஆலய வளாகத்தில் வந்து சந்திக்கும்படி வேதமூர்த்தி தரப்பினரிடம் கேட்டுக் கொண்டு தாங்கள் நாடாளுமன்றத்திலிருந்து சென்றுவிட்டதாகவும் இராமாஜி மேலும் தெரிவித்தார்.

“இதே ஆடையில் ஏற்கனவே நாடாளுமன்றம் நுழைந்திருக்கிறேன்”

இன்று நாடாளுமன்றத்தில் தான் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டது குறித்து மேலும் விவரித்த இராமாஜி “இதே ஆடையில் ஏற்கனவே நான் நாடாளுமன்றம் நுழைந்திருக்கிறேன். அப்போது பிரதமராக இருந்த துன் அப்துல்லா படாவியைச் சந்திக்க நாடாளுமன்றத்திற்குள் நான் சென்றிருக்கிறேன். அப்போது நான் தடுத்து நிறுத்தப்படவில்லை” என்றும் கூறினார்.

“இந்தியர்கள், இந்துக்கள் சம்பந்தப்பட்ட மிகப் பெரிய பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கு முன்னால் வேதமூர்த்தி போன்ற இந்தியத் தலைவர்களும், அமைச்சர்களும் முதலில், (இந்து சமய ஆடை என்பதால்) நாடாளுமன்றத்தில் இதுபோன்று அனுமதி மறுக்கப்படும், சிறிய, சாதாரணமாக விவகாரங்களுக்கு தீர்வு காணவேண்டும்” என்றும் இராமாஜி வலியுறுத்தினார்.

பின்னர் இராமாஜியும் அவரது குழுவினரும் சீ பீல்ட் ஆலய வளாகத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினர்.