அமெரிக்கா: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் முன்னாள் தனிப்பட்ட வழக்கறிஞர் மைக்கேல் கோவனுக்கு (Michael Cohen) புதன்கிழமை மூன்று ஆண்டுக் கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 2016–ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தல் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்திய நிதித் தொடர்பானச் சட்டத்தை மீறியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதனை அடுத்து டிரம்ப், அதிபர் பதவியிலிருந்து விலகியப் பிறகு, அவர் மீது குற்றம் சாட்டப்படலாம் என சில சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் தனி விவகாரங்களுக்கு நீண்ட காலமாக வழக்கறிஞராக செயல்பட்ட மைக்கேல் கோவன், தேர்தலின் போது, ஆபாசப் பட நடிகை ஒருவருக்கு 1,30,000 டாலர் பணம் அளித்ததாக அமெரிக்க ஊடகங்களுக்கு கடந்த பிப்ரவரி மாதத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தார். இவ்விவகாரம் தொடர்பாக மேலும் ஒரு ஆபாச பட நடிகை, கேரேன் மெக்டொகலுக்கும் பணம் வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
டிரம்ப்புடனான உறவு குறித்து பொது வெளியில் பேசுவதைத் தவிர்க்க ஸ்டோர்மி டேனியல்ஸ் எனும் அந்த நடிகைக்கு பணம் வழங்கப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியான பின்பு இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. இதனை, நியூயார்க்கில் உள்ள வழக்கறிஞர்கள், கடந்த வாரம் நீதிமன்ற தீர்ப்பில் உறுதிப்படுத்தினர். ஜனாதிபதி தனது பிரச்சாரத்தைப் பாதுகாக்க அப்பெண்ணுக்கு பணம் செலுத்துமாறு உத்தரவிட்டதை அவர்கள் உறுதிபடுத்தினர்.
ஆயினும், இக்குற்றச் சாட்டுகளை டிரம்ப் மறுத்தார். இவ்விரண்டு பெண்களுக்கு செலுத்தப்பட்ட பணமானது பிரச்சாரப் பணத்திலிருந்து அளிக்கப்படவில்லை என்று கூறினார்.